வெற்றி பெற்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் ஒரே ஒருமுறை தோல்வி கண்டால் ஒரேயடியாக ஒதுக்கிவைப்பதும் திரையுலகில் வாடிக்கையாக நடப்பதுதான்.
அந்த வகையில் ‘தக் லைஃப்’ படம் மணிரத்னத்தை முடக்கிவிட்டது. கமலுக்கு அடுத்தபடியாக ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார் மணிரத்னம். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்தது.
ஆனால் ‘தக் லைஃப்’ படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள் ஒரே நாளில் ரஜினி, லைக்கா என இருதரப்பு மனத்தையும் மாற்றிவிட்டது. லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டதாகத் தகவல்.
கடந்த சில மாதங்களாக ரஜினியுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தார் மணிரத்னம். எனினும், லைக்கா நிறுவனத்தின் முடிவை அவரால் மாற்ற முடியவில்லை.
இதேபோல் சிம்புவை வைத்து படம் இயக்கும் திட்டத்துடன் அவரது கால்ஷீட்டையும் பெற்றிருந்தார் மணிரத்னம். தற்போது அந்தப் படமும் அவருக்குக் கைகூடவில்லை.
வேறு வழியின்றி, மீண்டும் புதுமுகங்களை மட்டுமே வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இம்முறை அவருடன் ஏ.ஆர்.ரகுமான் இணைவார் எனத் தெரிகிறது.

