இப்போது தமிழ்த் திரையுலகத்தின் தலைநகரமான கோடம்பாக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் குறித்துத்தான் பரவலாக, பரபரப்பாகப் பேசப்படுகிறது.
படத்தின் நாயகி யார், நகைச்சுவை நடிகர் யார்? இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர் யார்? என்று பல கேள்விகள் வலம் வருகின்றன. எதுவாக இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உறுதியாக நம்ப முடியும். எனினும், யூகங்கள் பரவத்தானே செய்யும்.
அந்த வகையில், ‘சந்திரமுகி’ படத்தைப் போல் மீண்டும் ரஜினியும் வடிவேலும் நகைச்சுவைக் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சுந்தர்.சி. இயக்கம் என்பதால், சந்தானமும் தனது கொள்கையை தளர்த்திக்கொண்டு நகைச்சுவைக்குப் பொறுப்பேற்கக்கூடும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மற்றொரு புறம் யோகிபாபுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் ரஜினி மனதைக் கவர்ந்தவர் என்பதால் அவர்தான் ரஜினியுடன் இணைந்து ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்றும் யோகியின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
கணவர் சுந்தர்.சி. படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவார் குஷ்பு. ரஜினி படத்திலும் இந்த வழக்கம் நீடிக்குமாம். இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, கமல்ஹாசன் இப்படத்தில் நடிப்பாரா என்ற கேள்விதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினியின் நண்பர் என்ற வகையில் தயாரிப்பாளர் கௌரவ வேடத்தில் நடிப்பார் என்றுதான் கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

