தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் சினிமாவின் பிரபலங்களும் வாரிசுகளும்

4 mins read
edc5cddb-a372-46a6-8232-cc5f11135af1
தங்கள் வாரிசுகளுடன் நடிகர்கள். - படம்: ஊடகம்

திரையுலகில் ஒருசில விவகாரங்களுக்கு மட்டும் எப்போதுமே தீர்வு காண முடியாது.

கதாநாயகர்களுக்கு இடையேயான மறைமுக மோதல், நாயகிகளுக்கு இடையேயான மறைமுகப் போட்டி ஆகியவை இதற்கான உதாரணங்கள். அந்த வரிசையில் பிரபல திரைக் கலைஞர்கள் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தும் விதத்தையும் சேர்க்கலாம்.

பிரபல நடிகர் அல்லது நடிகை, இயக்குநரின் மகனோ, மகளோ திரையுலகில் நுழைவது எளிது. இதற்கு ஒரு பட்டியல் தயாரித்தால் கால் கிலோமீட்டராவது நீளும். பெரும்பாலான வாரிசுகளால் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிலர் முட்டி மோதி அப்போது ஒன்று, இப்போது ஒன்று என கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நாள்களைக் கடத்துகிறார்கள்.

அதேசமயம், சில வாரிசுகள் தங்களுடைய தந்தை அடைந்ததைவிட அதிக உயரத்தை எட்டிப்பிடித்து சாதித்த கதைகளும் உண்டு.

அத்தகைய சினிமா பிரபலங்கள், அவர்களுடைய வாரிசுகள் குறித்து பார்ப்போம்.

எஸ்.ஏ.சந்திரசேகர்-விஜய்

எஸ்ஏசிக்கு அரசியலில் ஆர்வமுண்டு, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு என்பது அவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் பளிச்செனத் தெரியும். 1980-2000வது காலகட்டத்தில் வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

மகன் விஜய்யை 1992ஆம் ஆண்டு, தாம் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் அறிமுகம் செய்தார். பிறகு ‘ஒன்ஸ் மோர்’, ‘நெஞ்சினிலே’, ‘சுக்ரன்’, ‘பிரியமுடன்’ எனப் பல படங்களில் விஜய்யை நாயகனாக நடிக்க வைத்தார். இன்று, தன் தந்தையைவிட மகன் ஒரு படி அதிக உயரத்தை எட்டிவிட்டார்.

சூர்யா-கார்த்தி-சிவகுமார்

‘திரையுலக மார்கண்டேயன்’ என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர், எந்தவிதமான கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்காத கண்ணியமான நடிகர் என்று பெயரெடுத்தவர் சிவகுமார்.

தனது இரு மகன்களான சூர்யா, கார்த்தி இருவருக்கும் திரையுலகில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர் பல பக்திப் படங்களில் நாயகனாக நடித்த சிவகுமாரைப் பார்த்து அன்றிருந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளும் அவ்வாறு ஒழுக்கமாக வளர வேண்டும் என விரும்பினராம்.

சூர்யா-கார்த்தி இருவருமே இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் ஆகிவிட்டனர்.

சூர்யா தனது 42வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கார்த்தி, தொடர்ந்து வெற்றிப் படைப்புகளைத் தந்து வருகிறார். இருவரும் தந்தையைப் போலவே சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர்.

சிம்பு-டி.ராஜேந்தர்:

1980களில் நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கிய பல படங்கள் அனைத்தும் தனித்துவமாகவும் மக்கள் இதுவரை கேட்டிராத கதையாகவும் இருந்தன.

தந்தை எட்டடி பாய்ந்தார் எனில் மகன் சிம்பு 16 அடி பாய்ந்து அசத்தினார்.

டி.ஆரின் மகள், இரண்டாவது மகன் குறளரசன் ஆகியோரும் திரையுலகில் பணியாற்றி உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் பல படங்களில் முகம் காட்டினார் சிம்பு.

விழுந்து, மீண்டும் எழுந்து வெற்றி பெறுவது சாதாரணமல்ல. ஆனால் சிம்புவுக்கு இது வழக்கமான ஒன்று.

பல தோல்விகளுக்கு மத்தியில் சில அசாதாரண வெற்றிகளையும் பெற்று, இன்றும் நல்ல மார்க்கெட் மதிப்புடன் வலம் வருகிறார்.

தனுஷ்-கஸ்தூரி ராஜா:

கோலிவுட், ஹாலிவுட் என எங்கும் தனுஷைப் பற்றி தயக்கமின்றிப் பேசலாம். இவரெல்லாம் ஒரு கதாநாயகனா? என்று எள்ளி நகையாடியவர்கள்கூட தனுஷின் உழைப்பைக் கண்டு அசந்து போயினர்.

ஒல்லிக்குச்சி என்று கேலி செய்யப்பட்டவர், தனது அர்ப்பணிப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். தனுஷைக் கோடம்பாக்கத்தில் ‘உலக நடிகர்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

கஸ்தூரி ராஜாவின் இன்னொரு மகனான செல்வராகவனும் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர். இப்போது படங்களில் நடித்தும் வருகிறார்.

கார்த்திக்-கெளதம் கார்த்திக்:

‘காதல் இளவரசன்’ கார்த்திக் 1990களில் நடித்த காதல், சமூகப் படங்கள், அச்சமயம் பெரும் வரவேற்பைப் பெற்றன. கார்த்திக்கின் வசன உச்சரிப்பு, உடல்மொழி எனப் பல அம்சங்கள் ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

இவரது மகன் கெளதம் கார்த்திக், 2013ஆம் ஆண்டு வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்போது தமிழ்ச் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் கௌதமும் ஒருவர்.

முரளி-அதர்வா:

மறைந்த நடிகர் ‘இதயம்’ முரளியின் செல்ல மகன் அதர்வா. தமிழ் சினிமாவின் ரசிகைகளின் கனவுக் கண்ணனாகவும் வசீகர நாயகனாகவும் வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டிஎன்ஏ’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமந்தா, வேதிகா, ஸ்ரீதிவ்யா போன்ற நாயகிகளுடன் இணைந்து நடித்துள்ள அதர்வா, நடிகராக விரும்பும் தன் தம்பி ஆகாஷுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க உதவுகிறார்.

தியாகராஜன்-பிரசாந்த்

அஜித், விஜய் என்ற இரு மலைகளுக்கு மத்தியில் தனிக்கொடியை உயர்த்தியவர் பிரசாந்த். பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாகச் சாதிக்கவில்லை. தந்தை தியாகராஜன், தனது மகனின் வெற்றி, தோல்வியின்போது உடனிருந்து வழிநடத்துகிறார். வெளிநாடுகளில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார் பிரசாந்த்.

இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு, சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜயகுமார் மகன் அருண் விஜய், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், விக்ரம் மகன் துருவ் விக்ரம், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என்று ஆண் வாரிசுகளில் சிலர் வெற்றிபெற்றுள்ளனர் என்றாலும், பலர் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இதேபோல், பிரபலங்களின் பெண் வாரிசுகளில் சிலரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல்ஹாசன் மகள்கள் ஷ்ருதி, அக்ஷரா ஹாசன், அருண் பாண்டியன் மகள் கீர்த்தி, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் தான்யா என்று மேலும் பல வாரிசுகள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இப்போது காலம் மாறிவிட்டது. நடிகர் மகன் நடிகராகத்தான் உருவாக வேண்டும், இசையமைப்பாளர் மகன் இசையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் கனவோடு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தயாரிப்பில் தற்போது ‘Mrs & Mr’ திரைப்படம் வெளியானது. வரும் காலங்களில் நாயகியாகவும் நடிக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்