ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார். பாலாஜியின் பிறந்தநாளையொட்டி படத்தலைப்பு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது சமூக ஊடகப் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் பாலாஜி.
மேலும், அடுத்த மாதம் ‘கருப்பு’ படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து தரக் காத்திருப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 23ஆம் தேதி, சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
அதைத்தான் பாலாஜி சூசகமாகத் தெரிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, ‘கருப்பு’ படத்தின் படப்பிடிப்பு முழுமை அடையும் முன்பே சூர்யா மனதைக் கவர்ந்துவிட்டது.
பட்ஜெட்டுக்கு ஏற்ப பாலாஜி அனைத்தையும் திட்டமிட்டுச் செய்வதும் சூர்யாவுக்குப் பிடித்துவிட்டதாம்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அது உண்மையா என்பது உறுதியாகாத நிலையில், ‘வாடிவாசல்’ படத்தைத் தயாரிக்கும் தாணுவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே உறுதி அளித்திருந்தாராம் சூர்யா.
அந்தப் படத்தை ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இது சூர்யாவின் 47வது படமாக உருவாகிறது.