இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் மகன் ராக்கியும் விரைவில் தன் தந்தையைப் போல் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். இவர் இயக்கப் போகும் படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.
“இது முழுநீள வணிகப் படமாகவும் திகில் நிறைந்த கதையாகவும் இருக்குமாம். மகன் திரையுலகில் அறிமுகமாவது பார்த்திபனை உற்சாகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
“ராக்கி பார்த்திபன் என் மகன். என் உயிருக்கு நிகர். கறுப்பு வெள்ளை படங்களில் இருந்து பார்த்துப் பார்த்து தெளிந்தத் திரை ஞானம் பெற்று, திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் இயக்கமும் கற்று, படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்க காத்திருக்கிறார்.
“விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல் அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய்தான் பேசுவார்.
“தன் ‘அப்பாவைவிட’ என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்குச் சிறந்த நாள்,” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.