‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான கன்னட நடிகை நந்திதா, திரைத்துறை தமக்குக் கற்றுத் தந்த பாடம் குறித்து அண்மையில் மனந்திறந்தார்.
தமது சிறுவயதில், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று யார் கேட்டாலும், நடிகையாக வேண்டும் என்றே தாம் கூறியதாக இவர் சொன்னார்.
“அந்த அளவுக்கு நான் சினிமாமீது வெறியோடு இருந்தேன். இதன் காரணமாகவே நான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களிலும் முழுமையாக ஈடுபாடு காட்டி நடித்து வந்துள்ளேன்,” என்றார் இவர்.
திரைத்துறையைப் பொறுத்தவரை எதுவுமே நிரந்தரமில்லை என்ற கருத்தையும் நந்திதா முன்வைத்தார்.
“இரண்டு படங்கள் வெற்றி பெற்றதும் நான்தான் சிறந்த நடிகை என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. சினிமாவில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று சொன்ன இவர், இந்த எதார்த்தத்தை தாம் கடந்துவந்த பாதை மூலம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
இதற்கிடையே, தாம் நடிக்க முன்வராத சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையும் நந்திதா நினைவுகூர்ந்தார். பல திரைக்கதைகளைச் சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும், அதை நினைத்து தாம் வருத்தப்பட்டது இல்லை என்றார் இவர்.
“என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டிருக்கிறது. இதனால், நடக்காத விஷயங்களை நினைத்து நான் ஒரு நாளும் வருந்தியது கிடையாது. அந்த அளவுக்கு இந்தத் திரையுலகம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டது.
“தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள்கூட கிடைக்கலாம்,” என்று சொன்ன இவர், அதற்காக தாம் பொறுமையுடன் காத்திருப்பதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ என பல திரைப்படங்களில் நடித்த நந்திதா, கடைசியாக 2024ல் வைபவுக்கு ஜோடியாக ‘ரணம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் இவர் நடித்து வருகிறார்.

