கடந்த சில காலமாக திரைப் பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகள் சர்ச்சையில் முடிவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், ராஷ்மிகா மந்தனாவும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ‘குபேரா’ திரைப்படம் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றது. அண்மையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில், தாம் கொடவா சமூகத்தைச் சேர்ந்தவள் என்றும் தமக்கு முன்பு அந்தச் சமூகத்தில் இருந்து யாரும் திரைத் துறைக்கு வந்ததில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் ராஷ்மிகா மந்தனா.
அவர் இப்படிச் சொன்னதுதான் சர்ச்சையாகிவிட்டது. ராஷ்மிகாவின் இந்தக் கருத்துக்கு கொடவா சமூகத்தைச் சேர்ந்த மற்ற நடிகைகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“கொடவா சமூகத்திலிருந்து திரைத்துறைக்குள் வந்த நடிகர்களின் உண்மையான விவரங்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெரியும். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
“ராஷ்மிகாவிடம்தான் அவர் கூறிய கருத்திற்கு விளக்கத்தைக் கேட்க வேண்டும். எனக்கு முன்பே, கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகை சசிகலா சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்குள் வந்தேன். அதன் பிறகு கொடவா சமூகத்தைச் சேர்ந்த பலரும் இத்துறையில் சாதித்துள்ளனர்,” என்று நடிகை பிரேமா கூறியுள்ளார்.
கன்னட நடிகையான நிதி சுப்பையா கூறுகையில், “ராஷ்மிகா சொல்வது நகைச்சுவை போல இருக்கிறது. அவர் முன்வைப்பதாலேயே எந்தக் கருத்தும் உண்மையாகிவிடாது.
தொடர்புடைய செய்திகள்
“இதனை மிகப் பெரிய பிரச்சினையாகக் கருத வேண்டாம். ராஷ்மிகா சினிமாவில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நடிகை பிரேமா கொடவா சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். இருப்பினும், ராஷ்மிகா ஏன் இப்படியோர் கருத்தைச் சொன்னார் எனத் தெரியவில்லை,” எனக் கூறியுள்ளார் நிதி சுப்பையா.