நிறம் அல்ல, திறமைதான் முக்கியம்: சேத்தன் சீனு

1 mins read
d55d67ae-112a-47ba-bf89-3ee582174abe
‘வள்ளுவன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘வள்ளுவன்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சேத்தன் சீனு. சின்னத்திரை தொடர்கள் மூலம் ஏற்கெனவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் இவர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் கூறிய தகவல், திரையுலக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிற பேதம் காரணமாக, தனது நிறத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகப் பேசியுள்ளார் சீனு. இவர் ஏற்கெனவே விஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் நடித்துள்ளார்.

“நான் ‘கருங்காலி’ என்ற தமிழ்ப் படத்தில்தான் நாயகனாக திரையுலகில் அறிமுகமானேன். பிறகு ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் நடித்து, அதன் வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக இந்த மேடைக்கு வந்தேன்.

“இது தமிழில் நான் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம். இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

“பட வாய்ப்பு தேடி விருகம்பாக்கம் முதல் நடிகர் அஜித் வீடு வரை எத்தனை தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றதோ, அவை அனைத்துக்கும் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறேன்,” என்றார் சீனு.

ஆனால் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதற்கு எல்லாரும் சொன்ன ஒரே காரணம், ‘சார், நீங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கிறீர்கள். தமிழ்க் கதாபாத்திரங்களுக்குப் பொருந்தமாட்டீர்கள்’ என்பதுதானாம்.

“அவர்களிடம் எல்லாம் இப்போது கேள்வி கேட்கத் தோன்றுகிறது. எம்ஜிஆர், கமல், அஜித் ஆகியோர் என்ன நிறம்? நிறம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. நிறத்தைப் பார்த்து வாய்ப்பு கொடுக்காதீர்கள். திறமையைப் பாருங்கள்,” என்கிறார் சேத்தன் சீனு.

குறிப்புச் சொற்கள்