ராஷ்மிகா மந்தனா மிகவும் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
குறிப்பாக ‘அனிமல்’ திரைப்படம் மீதான விமர்சனங்கள் அவருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா, ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் திரையுலகையும் தொட்டதில் இருந்து ‘பான் இந்தியா ஸ்டார்’ ஆக மாறியிருக்கிறார்.
அந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்திருக்கிறது.
இருந்தாலும் ‘அனிமல்’ படத்தை பற்றிய சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை.
குறிப்பாக ரன்பீர் கபூர் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ராஷ்மிகாவின் கவர்ச்சிகரமான காட்சிகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் படத்தை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்று அவர் கூறியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் விமர்சனங்கள் குறித்து அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
“படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. படத்தில் ஹீரோ புகைபிடிக்கிறார் என்றால், அவர் எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிறார் என்று அர்த்தமாகி விடாது. அப்படி நினைத்தால் அதுபோன்ற படங்களை பார்க்காதீர்கள். இங்கே படத்தை பார்க்கச் சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை. எல்லாவற்றையும் விமர்சிப்பது சரியாகாது,” என்று கூறியுள்ளார்.
“நான் திரையில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான நபர் ஒளிந்திருப்பார். அதை ‘அனிமல்’ படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா வெளிக்காட்டியுள்ளார், அவ்வளவுதான். இதற்கு மேல் இதை பெரிதுபடுத்த வேண்டாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.