தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விருதுகள்மீது நம்பிக்கை இல்லை: விஷால் சர்ச்சை கருத்து

2 mins read
4463e1ab-087f-481b-8993-7ec4f12c0e8a
விருது குறித்து பேசி சர்ச்சைக்கு வித்திட்ட விஷால். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகரில் ஒருவர் விஷால். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகை சாய் தன்ஷிகாவுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இந்நிலையில், ‘Yours Frankly Vishal’ என்ற வலையொளியில் விஷால் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அந்த வலையொளியின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. அதில், “விருதுகள்மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது மூடத்தனம். 7 கோடி மக்களின் விருப்பங்களை எவ்வாறு நான்கு பேர் அடங்கிய குழு முடிவு செய்ய முடியும்,” என அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும், மக்களுக்கு யாரைப் பிடிக்கும் என்பதை அக்குழு எவ்வாறு தெரிந்துகொள்கிறது. தேசிய விருதையும் சேர்த்து தான் கூறுகிறேன். மக்களிடம் சென்று கேட்டால் தெரியும். எனக்கு விருது கிடைத்தால், அது தங்கத்தில் இருந்தாலும் அடகுவைத்து பணத்தை அன்னதானம் செய்வேன். விருது விழாக்களுக்குச் செல்வதைக் கூட நான் விரும்பமாட்டேன்,” என்றார் விஷால்.

இது தொடர்பான தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ள இணையவாசிகள் பலரும், விஷாலின் கருத்து திரையுலகில் விருது வாங்கும் சக நடிகர்களை அவமதிப்பதற்கு சமம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘மகுடம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அப்படம் விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில், துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், விஷால், படக்குழு, ரவி அரசு ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், எஞ்சிய படப்பிடிப்பை விஷால் இயக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. தமது சமூக ஊடகப்பதிவின் மூலம் அத்தகவல் உண்மைதான் என விஷால் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்