கோடம்பாக்கத்தின் இளம் இசைப் புயல்கள்

4 mins read
79f969d0-0c77-466d-b8ef-5e0c69864594
அஞ்சனா ராஜகோபாலன். - படம்: ஊடகம்
multi-img1 of 5

ஒரு படத்தின் வெற்றிக்குரிய முதல் அடியை எடுத்து வைப்பது அதன் பாடல்கள்தான்.

தமிழ்த் திரையுலகில் பல விஷயங்கள் காலப்போக்கில் மாறியிருந்தாலும், இந்த ஒன்று மட்டும் இன்னும் மாறவில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என்று நீளும் இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம்பெறக்கூடிய ஒருவர்கூட இந்தக் கூற்றை மறுக்க மாட்டார்கள்.

இளம் இசைப் புயலாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ‘ஆஸ்கர்’ நாயகன் ஆகி சாதித்த ஏ.ஆர்.ரகுமானின் பாதையைப் பலர் பின்பற்றியதன் விளைவாக, இன்று தமிழ்ச் சினிமாவில் பல இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி வருகின்றனர்.

சாய் அபயங்கர், அம்ரித் ராம்நாத், பால் டப்பா, சாமுவேல் நிக்கோலஸ், அஞ்சனா ராஜகோபாலன் என்ற புதிய பட்டியலும் நாள்தோறும் பெரிதாகி வருகிறது.

அம்ரித் ராம்நாத்

யார் இந்த அம்ரித் ராம்நாத்?

‘3BHK’ தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘கனவெல்லாம் நிஜமாக ஒரு நாள் ஆகும்’, மலையாளத்தில் வெளியான ‘ஞாபகம் மோதுதே மனம் ஏங்குதே’ ஆகிய பாடல்களும் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைகொண்டன. இரு பாடல்களுமே அம்ரித் இசையில் உருவானவை.

இதன் பிறகே அம்ரித் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான விடை தெரிந்தபோது பலருக்கும் ஆச்சரியம்.

தன் பின்னணி அடையாளம் தெரியும் முன்பே தன் திறமையை அடையாளப்படுத்தியவர் அம்ரித்.

மொத்த இந்தியாவுக்கும் உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசைப் பிரியர்களுக்கும் நன்கு அறிமுகமான பாடகி ‘பாம்பே’ ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித்.

தனது குடும்பத்தின் முதல் மொழி இசைதான் என்று குறிப்பிடும் இந்த இளம் இசையமைப்பாளர், ஒருவேளை இசை தன்னைக் கைவிட்டிருந்தால், உணவுத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் எனத் திட்டமிருந்ததாகக் கூறுகிறார்.

நேர்மையாக வாழ்வது, உண்மையாகச் செயல்படுவது, இசை என அனைத்தையும் அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டாராம்.

“ஒரு படத்தின் பாடல்களுக்கு பாராட்டுகள் கிடைப்பதைவிட, அதன் பின்னணி இசைக்காகப் பாராட்டப்படுவதுதான் முக்கியம். நாம் செய்த வேலை சரியாக இருப்பதற்கான அடையாளம்தான் பின்னணி இசை. தேவையற்ற சப்தம், இரைச்சல் இல்லாத இசையைக் கொடுக்க வேண்டும். அதுதான் என் விருப்பம்.

“யாரும் பேச முடியாத, சொல்ல முடியாத இடங்களில்கூட இசை பேசும். அதுதான் இசையின் சக்தி. அதேசமயம் திரையுலகுக்கு ஏற்ற வகையிலும் என் பாடல்கள் அமையும்.

“அடுத்தடுத்து நான் இசையமைக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்கிறார் அம்ரித் ராம்நாத்.

சாய் அபயங்கர்

சாய் அபயங்கருக்கு அறிமுகம் தேவையில்லை. பெற்றோர் திப்பு, ஹரிணி ஆகிய இருவருமே பின்னணி பாடகர்கள் என்பதால் தாலாட்டு முதல் இந்நாள் வரை இவர்களது இனிய குரலைக் கேட்டு வளர்ந்ததாகச் சொல்கிறார் சாய்.

எனவே, இவருக்கும் இசைத்துறை சார்ந்த ஆர்வமும் ஆற்றலும் இருப்பதில் வியப்பில்லை.

ஆனால், அபயங்கர் பாடல்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் இசையமைப்பதிலும் தேர்ந்தவராக உள்ளார். அதனால், இவர் ‘16 அடி பாயும் குட்டி’ என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

அண்மையில் வெளியான ‘டியூட்’ படத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான பாடல்களுக்கு இளையர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

‘பால் டப்பா’ அனீஷ்

தமிழில் ‘ராப்’ இசைப் பாடகர்கள் பலர் இருந்தாலும், இளையர்கள் மத்தியில் ‘பால் டப்பா’ அனீஷ்தான் பிரபலமாக உள்ளார்.

இவரது தனியிசைப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர்கள் சித்தார்த் உள்ளிட்ட பலர் இவரது ரசிகர்கள்.

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ (His name is John) பாடல் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவரது ‘காத்து மேல’, ‘மக்காமிஷி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று அசத்தின.

தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் அனீஷ் நாயகனாக அறிமுகமாகிறார்.

சாமுவேல் நிக்கோலஸ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

‘ஐயையோ’ எனத் தொடங்கும் தனிப்பாடலைக் காணொளியுடன் வெளியிட்டுள்ளார் நிக்கோலஸ்.

தானே இசையமைத்துப் பாடி, நாயகனாகவும் நடித்துள்ள நிலையில், ‘ஐயையோ’ பாடலுக்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தனது நான்கு வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின்படி இசை கற்று வருகிறார். இவரது அறிமுகப் பாடலை சனா மரியம் இயக்கியுள்ளார்.

அஞ்சனா ராஜகோபாலன்

பொதுவாக திரையிசையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், விதிவிலக்காக அவ்வப்போது இதில் சில நட்சத்திரங்கள் மின்னுவதுண்டு. எனினும், நீண்ட காலம் தாக்குப் பிடித்ததில்லை.

இச்சூழலை எதிர்கொண்டு சாதிக்க வந்துள்ளார் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன்.

இசையைத் தாம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் கூறும் இவர், கர்நாடக இசையை முறைப்படிக் கற்றுக்கொண்டவர். பயிற்சிக்குச் செல்லாமலேயே கிட்டார் இசைக்க கற்றுக்கொண்டவர்.

இயக்குநர் மிஷ்கினுக்கு இசைப்பயிற்சி அளித்துள்ள இவர், ‘ஆபரா’ என்ற ஒருவகை மேற்கத்திய இசையில் புலமை பெற்றவராம்.

‘மாயக்கூத்து’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது இசை குறித்து நல்ல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்