கதாநாயகி, துணைக் கதாபாத்திரம் என எதற்கும் தயார் என்கிறார் கௌரி கிஷன்.
அறிமுகப் படத்திலேயே தன் திறமையை நிரூபித்து அசத்தியவர், தற்போது ‘96’ படத்தின் இரண்டாம் பாகம், ‘எல்ஐகே’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இவரது பாந்தமான, இயல்பான நடிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதுதான் கௌரியின் தனித்துவம்.
அண்மையில் நடித்து முடித்த ‘அதர்ஸ்’ படத்தில் மருத்துவராக நடித்தபோது உற்சாகமாக இருந்ததாக அண்மைய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கௌரி. இவரது தாத்தா மருத்துவராம். அதனால் அந்தத் துறை குறித்த பல தகவல்கள் இவருக்கு அத்துப்படி.
‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கௌரி, அதன் இரண்டாம் பாகம் குறித்து தாம் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்தபோதே அதன் இயக்குநர் பிரேம்குமாரிடம், இந்த முயற்சி தேவையா என்று கேட்டுள்ளார் கௌரி.
“என்னைக் கேட்டால் நான் அந்தக் கதையைத் தொட வேண்டாம் என்றுதான் சொல்வேன். ஆனால், அது பிரேம்குமாரின் கனவு. அண்மைய ஒரு பேட்டியில்கூட தாம் எழுதிய கதைகளில் ‘96’ ஆகச் சிறந்தது என்று கூறியுள்ளார். ‘96’, ‘மெய்யழகன்’ போன்ற அற்புதமான படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் இயல்பாகவே ஆர்வம் அதிகமாகி, அந்தப் படைப்புக்காக காத்திருக்கத் தோன்றுகிறது,” என்று கூறியுள்ள கௌரி, கடைசியாக தாம் பார்த்த படங்களில் உணர்ச்சி மிகுதியில் அழவைத்தது ‘மெய்யழகன்’தான் என்று தெரிவித்துள்ளார்.
படம் முடிந்ததும் திரையரங்கில் இருந்தபடியே இயக்குநர் பிரேம்குமாரைத் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினாராம்.
தொடர்புடைய செய்திகள்
அவரது எழுத்து, கார்த்தி, அரவிந்த்சாமியின் கூட்டணி என அனைத்தும் தம்மைக் கவர்ந்ததாகச் சொல்கிறார்.
‘எல்ஐகே’ படம் குறித்து?
“எனக்கு முக்கியமான கதாபாத்திரம். ஒவ்வொரு படமும் இயக்குநரின் பெருங் கனவாக இருக்கும். அந்த வகையில் ‘எல்ஐகே’ படமும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் கனவு.
“அந்தப் படத்தின் கதையை எளிதாக யாராலும் எழுதிவிட முடியும். அதைக் காட்சிப்படுத்துவதும் மிகவும் கடினம்,” எனக் கூறியுள்ள கௌரி, இளம் நடிகர்களை வைத்து அந்தக் கடினமான பணியை விக்னேஷ் சிவன் சாத்தியமாக்கி உள்ளதாக வியந்துள்ளார்.
படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, தற்போதைய இந்திய சினிமாவில் இருந்து முற்றிலும் புது மாதிரியான படைப்பாக உருவாகி இருப்பதைக் கண்டு அசந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், தாம் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தை அளித்ததுடன், இந்தப் படத்துக்குப் பிறகு திரையுலகில் தன் மதிப்பு உயரும் என உறுதி அளித்ததாக உற்சாகமாகச் சொல்கிறார்.
“பொதுவாக நான் வாய்ப்புகளைத் தேடுவதில்லை. தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யுடன் நடித்தேன். கொவிட் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களின் இசைத் தொகுப்பில் நடிக்கும்படி கேட்டனர். அதிலும் நடித்தேன்.
“பெரிய படத்தில் நடித்த கையோடு, அடுத்து சின்ன படத்திலும் நடிப்பேன். கதை பிடித்திருந்தால் அதுவே எனக்குப் போதுமானது.
“வெவ்வேறு பாதைகளில் நடைபோட விரும்புகிறேன். ஆறு மாதம் வீட்டில் சும்மா இருந்தாலும் சோர்வடைய மாட்டேன். உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு எந்த வெற்றியும் இல்லை. அதற்காக நான் முடங்கிவிடவில்லை,” என்கிறார் கௌரி கிஷன்.

