பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா

1 mins read
b6f5b5a2-02a0-4442-b88e-c14b2cb7e1cf
நஸ்ரியா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தமிழில் நடித்துள்ளார் நஸ்ரியா. அவரது மறுபிரவேசம் ஓர் இணையத் தொடர்மூலம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ‘ஃபால் ஆஃப் எ சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தத் தொடரில் நஸ்ரியா, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்நாள்களில் லட்சுமிகாந்தன் என்ற செய்தியாளர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார் தியாகராஜ பாகவதர். அவரது சிறை நாள்கள்பற்றிய தொகுப்பாக இத்தொடரை உருவாக்கி உள்ளனர்.

இந்த இணையத் தொடர்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காணொளிகளில், நஸ்ரியா பல காட்சிகளில் இடம்பெற்றிருந்தார்.

கடைசியாக அவர், ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக, ‘நேரம்’, ‘ராஜா ராணி, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருந்தார் நஸ்ரியா.

தனுஷுடன் நடித்த ‘நையாண்டி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

திருமணத்துக்குப் பின் திடீரென திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தபோது, ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பிறகு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியானார் நஸ்‌ரியா.

இந்நிலையில், அவர் மீண்டும் நடிக்க வந்ததும் தமிழ் இணையத் தொடரில் நடித்திருப்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள வேடங்களாகத் தேர்வு செய்து நடிப்பதே நஸ்‌ரியாவின் திட்டமாம்.

குறிப்புச் சொற்கள்