‘ஸ்டன்ட்’ இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
படம் எதிர்பார்த்த அளவு இல்லை என பெரும்பாலான விமர்சகர்கள் கூறியிருந்தனர். எனினும் சூர்யாவின் பங்களிப்பு குறித்து யாரும் பெரிதாகக் குறைகூறவில்லை.
இந்நிலையில், ‘ஃபீனிக்ஸ்’ படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு திரைகாண உள்ள நிலையில், அப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். பின்னர் வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் ஜாலியாகப் பேசினார்.
மகன் சூர்யாவுக்கு ‘ஆக்ஷன்’ படம் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் ‘ஃபீனிக்ஸ்’ அத்தகைய படமாக இருந்ததால்தான் அதில் நடிக்க ஆர்வம் காட்டினார் என்றும் குறிப்பிட்டார் சேதுபதி.
‘அப்பா நீங்களும் அதிரடியான சண்டைகள் நிறைந்த படத்தில் நடிக்க வேண்டும்’ என்று சூர்யா தம்மிடம் அடிக்கடி சொல்வார் என்றும் சிரித்தபடி குறிப்பிட்டார்.
“நான் ‘ஜவான்’ இந்திப் படத்தின் படப்பிடிப்பில் இருந்த போதுதான் இயக்குநர் அனல் அரசுவைச் சந்தித்தேன். அப்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் கதையைச் சொல்லி, ‘உங்கள் மகன் இதில் நடிக்கட்டும்’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் எதுவும் சொல்லவில்லை. ‘நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்’ என்றேன். அதன் பிறகு நான் அதில் தலையிடவில்லை. எல்லாம் முடிந்து படத்தைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் விஜய் சேதுபதி.
தற்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்தப் படம் முடிவதற்குள் தெலுங்கில் தெளிவாகப் பேசக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மனத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

