குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ‘மெட்ராஸ் மேட்னி’ படத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போக, வாய்மொழியாக இப்படம் குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் வேகமாகப் பரவின.
அதன் விளைவாக, ‘தக் லைஃப்’ படத்துடன் வெளியான ‘மெட்ராஸ் மேட்னி’ கமல்ஹாசன் படத்தையே விஞ்சும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கதை நாயகன் காளி வெங்கட், “இந்த நிகழ்வு இதுவரை படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்காக மட்டுமல்ல, இனிமேல் நீங்கள் கொடுக்கவிருக்கும் வரவேற்பிற்காகவும்தான்,” என்றார்.
இப்படத்தின் கதை தன் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்ட அவர், தனது தந்தையாகவே வாழ்ந்துவிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் நடித்ததாகச் சொன்னார்.
“இந்தப் படத்தின் நிகழ்வில் நான் அழுதுவிடக் கூடாதெனக் கவனமாக இருக்கிறேன். இதுவரை அப்படி இருந்துவிட்டேன். இனியும் இருக்க வேண்டும்.
“முதல் நாள் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார். என்னுடைய சட்டையே கிட்டத்தட்ட நனைந்துவிட்டது. அதே மாதிரி இன்னொருவரும் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு கதாபாத்திரத்தில் நேர்மையாக நடித்தேன். அதற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கலையில் மட்டும்தான் அழுகையை ரசிக்க முடியும். அது நடிகர்களுக்குக் கிடைத்த வரம்.
“வேறு எந்தத் துறையிலும் அழுகையை ரசிக்க முடியாது. இந்தப் படத்திற்காக கண்ணீர் மல்க கிடைத்த பாராட்டை நான் எப்போதும் மறக்க மாட்டேன்,” என்றார் காளி வெங்கட்.
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணி, “நாங்கள் ‘தக் லைஃப்’ படத்தோடு மோதினோம். காளி வெங்கட் முன்பு சொன்னதுபோல், திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்க வந்தோம் என்கிற கதைதான் இது.
“எனினும், இந்தப் படத்திற்கு செய்தியாளர்களின் உறுதுணை இருந்தது. மக்களின் வார்த்தைகள் பரவி, பலரும் படம் பார்த்தார்கள். எனவே, அனைவருக்கும் எனது நன்றி.
“ஆனால், முன்னணி விமர்சகர்கள் யாரும் என்னுடைய படத்தை விமர்சனம் செய்யவில்லை,” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் கார்த்திகேயன் மணி.