பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகைகளுக்குக்கூட கிடைக்காத ரசிகர் கூட்டம் தமக்குக் கிடைத்திருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் நடிகை தேஜு அஸ்வினி.
‘என்ன செய்யப் போகிறாய்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான இவர், தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வெளியாக உள்ளது.
இந்நிலையில், தாம் குறும்படங்களில் நடித்து, அதன் பின்னர் விளம்பரப் படங்களுக்கான வாய்ப்பைப் பெற்று இறுதியாகத்தான் திரைத்துறையில் கால்பதித்ததாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தேஜு அஸ்வினி.
“பொருளியல் சூழலும் எனது கனவும் சேர்ந்துதான் என்னை நடிகையாக மாற்றியுள்ளது. என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது சினிமாதான். எனவே, இந்தத் துறைக்கு இறுதி வரை உண்மையாக இருப்பேன்.
“எனக்கு கிடைத்துள்ள ரசிகர்கள்தான் எனது அதிர்ஷ்டம். அவர்கள் அனைவருமே கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு எனக் கருதுகிறேன்,” என்று மனம் திறந்துள்ளார் தேஜு அஸ்வினி.
காதல் கதைகளைப் போல், அதிரடி நாயகி கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

