ஒரு புதுப் படத்துக்காக நடிகர்கள் விஷால், விஜய் ஆண்டனி, சுந்தர்.சி ஆகிய மூவரும் இணைய உள்ளனர்.
‘மத கஜ ராஜா’ படத்தைத் தொடர்ந்து விஷாலும் சுந்தர்.சியும் புதுப் படம் ஒன்றில் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும், சில பிரச்சினைகளால் அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
இதனால் சுந்தர்.சி ‘மூக்குத்தி’ இரண்டாம் பாகத்தை இயக்கச் சென்றுவிட்டார். ‘மகுடம்’ படத்தில் நடிப்பதில் முனைப்பு காட்டினார் விஷால்.
இந்நிலையில், இருவரும் இணைந்து பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் புதிய படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
மூன்று பேருமே கதாநாயகர்களாகப் பல படங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நெருக்கமான நண்பர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும் படங்களுக்கு இசையமைக்கிறார்.
மூவரும் இணையும் படம் ‘மத கஜ ராஜா’வின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இத்தகவல் உறுதியாகவில்லை.