ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி இணைந்து நடித்துள்ள ‘டீசல்’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஹரிஷ்.
“கச்சா எண்ணெய் தொடர்பாக உலக அரங்கில் நிகழும் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் குறித்து இந்தப் படம் அலசும்.
“நான் வடசென்னையைச் சேர்ந்த மீனவனாக நடித்துள்ளேன். நடிகர் வினய், விவேக் பிரசன்னா உள்ளிட்ட நான்கு பேர் வில்லன்களாகவும் அதுல்யா ரவி வழக்கறிஞராகவும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
“முதல் முறையாக சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்துள்ளேன். மீனவர் கதாபாத்திரம் என்பதால் பெரும்பாலான காட்சிகளில் லுங்கி மட்டுமே அணிந்து நடிக்க வேண்டியிருந்தது.
“வடசென்னையில் உள்ள ராயபுரம், காசிமேடு, பழவந்தாங்கல் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு முடிவதற்குள் மீன்பிடிக்க ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்.
“ஒருகாலத்தில் தீபாவளியின்போது பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவற்றைப் பார்க்க திரையரங்குகளுக்கு ஆர்வத்துடன் செல்வேன். இப்போது நான் நடித்துள்ள படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது என்பதை நினைக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது,” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.