தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ படம் வெளியாகிவிட்டது.
அடுத்து காமினி இயக்கத்தில் ‘டியர் எக்ஸஸ்’, விவேக் ஓபராயுடன் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கிரே’, மனோஜ் பாஜ்பாயுடன் ‘மசூம் தி நியூ ஜெனரேஷன்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் நித்யா மேனன். இவை தவிர, மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நித்யா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
“மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட முடியாது. விருது குறித்த அறிவிப்பானது, பெருமையையும் மகிழ்ச்சியும் ஒருசேர அளித்த தருணம். 15 ஆண்டுகளில் 60 படங்களில் நடித்து முடித்துள்ளேன்.
“நான் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஏற்று நடித்த ‘ஷோபனா’ கதாபாத்திரத்தைப் போல் இதுவரை என் வாழ்க்கையில் ஒரு பெண்ணைச் சந்தித்ததே இல்லை. மிக வித்தியாசமாக, அதிகமாகப் பேசி எதையும் எதார்த்தமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரம் அது. முதலில் நானே அப்படிப்பட்ட பெண் அல்ல.
“எனக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாத ஒரு வேடத்துக்காக என்னை நானே தயார் செய்துகொள்ள சற்று மெனக்கெட்டேன். அந்த வேடத்தைவிட ‘இட்லி கடை’ கயல் கதாபாத்திரம் இன்னும் எதார்த்தமானது.
“இதுவரை நான் நடித்த பல்வேறு பாத்திரங்களில் இருந்து மிகுந்த வித்தியாசங்களுடன் உருவாக்கப்பட்ட உணர்வுபூர்வமான கதாபாத்திரம். பார்ப்பவர்களை அழவைக்கும் அளவுக்கு இருக்கும் அழுத்தமான, அதேசமயம் கொஞ்சம் குறும்புத்தனமும் வெளிப்படும்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நித்யா மேனன்.
தனுஷ் குறித்து?
தொடர்புடைய செய்திகள்
“நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என எதுவாக இருந்தாலும் அவர் முதலில் தனுஷ் என்பதுதான் முக்கியம். நான் அவரை அந்தக் கோணத்தில்தான் எப்போதுமே பார்த்திருக்கிறேன்.
“தன் வேலையில் முனைப்பாக இருப்பார். அவரது பரபரப்பில் ஓர் அர்ப்பணிப்பு இருக்கும். அதேசமயம் எதற்காகவும் கோபப்பட்டோ பதற்றமடைந்தோ பார்த்ததில்லை. ஒவ்வொரு படமும் ஒரு கூட்டு முயற்சி என்ற தெளிவை அவரிடம் பார்க்க முடியும்,”.
குடும்பப் பாங்கான வேடங்கள் மட்டுமே தேடி வருகின்றனவா?
“ஏன் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற கேள்வியை இப்படி மாற்றிக் கேட்கலாம். கவர்ச்சியோ குடும்பப் பாங்கோ, எத்தகைய வேடமாக இருந்தாலும் அதை ஏற்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனக்கு எந்த வேடம் ஒத்துவருமோ அதைத்தான் தேர்வு செய்கிறேன்.
“நிறைய கதாபாத்திரங்கள் தேடி வரும். எதில் நடித்தால் ரசிகர்களைச் சென்றடையலாம், எது நம் திறமைக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தரும் என்று பல அம்சங்கள் குறித்து யோசித்த பிறகே எந்தவொரு வேடத்தையும் தேர்ந்தெடுக்கிறேன்,” என்று சொல்லும் நித்யா மேனன், கடந்த 2012ஆம் ஆண்டு நடித்த ‘மைனா’ கன்னடப் படத்துக்காகத் தமக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்துபோனாராம்.
அதில் போலியோ பாதித்த பெண்ணாக நடித்திருந்தார். படம் பார்த்த பலர், ‘தேசிய விருது உறுதி’ எனக் கூறியபோதும், ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்தை விருதுப் பரிசீலனைக்கு அனுப்பவே இல்லையாம்.
அந்தக் கதாபாத்திரம் தேசிய விருதைத் தவறவிட்டதாக கன்னட ரசிகர்கள் பலர் இன்றுவரை தன்னிடம் சொல்லி வருத்தப்படுவதாகச் சொல்கிறார்.
“ஒருவர் தன் மனத்தையும் ஆத்மாவையும் வெளிப்படுத்தும் உணர்வுதான் நடிப்பு. இதுநாள் வரை பணம், புகழுக்காக எந்த வேடத்தையும் நான் தேர்வு செய்வதில்லை. ஒருவேளை அப்படிச் செய்திருந்தால் பத்து படங்களுக்குப் பிறகு காணாமல் போயிருப்பேன். மேலும், இத்தனை ஆண்டுகள், இதோ இந்த தேசிய விருது வரை திரையுலகம் என்னை அரவணைத்து இருக்காது.
“என்னைப் பொருத்தவரை என் உணர்வுகளைக் கலை வடிவத்தில் மாற்றித் தருவதுதான் நடிப்பு,” என்கிறார் நித்யா மேனன்.