இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், அண்மையில் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோரை இயக்கி வெளியிட்ட ‘தக் லைஃப்’ படம் தோல்வியுற்றது தொடர்பில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவர் 38 ஆண்டுகளுக்குமுன் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கமல்ஹாசன் அதில் கதாநாயகனாக நடித்தார்.
இருவரும் மீண்டும் கைகோத்த ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி, தோல்வியுற்றது.
அண்மைய நேர்காணலில் மணிரத்னம் அதுகுறித்துக் கருத்துரைத்துள்ளார்.
“எங்கள் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘தக் லைஃப்’ படத்தையும் அவர்கள் அதே பாணியில் எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், நாங்கள் நாயகனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக அதை எடுக்க விரும்பினோம். அந்த வகையில் ரசிகர்கள் ஒருவகையான படத்தை எதிர்பார்த்திருந்த வேளையில் நாங்கள் வேறுவகையான படத்தைக் கொடுத்ததுதான் தோல்விக்குக் காரணம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ரசிகர்கள் நாயகனைக் கருத்தில்கொள்ளாமல் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் இது வெற்றிபெற்றிருக்கும். இருப்பினும் அவர்கள் விரும்பும் வகையில் படத்தை வழங்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று மணிரத்னம் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.