மலேசிய பாடகர் ‘டார்க்கி’ நாகராஜாவின் வாழ்க்கை ‘அக்கு டார்க்கி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது.
பாக்கெட் பிளே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விக்ரம் லட்சுமணன் இயக்குகிறார்.
யுகன் சண்முகம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார்.
‘அக்கு’ என்றால் மலாய் மொழியில் ‘நான்’ என்று அர்த்தமாம்.
“சாம்பாராக் என்ற தனித்துவமான இசை வடிவை உருவாக்கியவர் ‘டார்க்கி’ நாகராஜா. அவரது துணிச்சலான குரலையும் எதையும் வித்தியாசமாக அணுகும் பார்வையையும் இத்தலைப்பு பிரதிபலிப்பதாகக் கருதுகிறோம்.
“தோட்டப்புறத்தில் இருந்து மனம் நிறைந்த கனவுகளோடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சென்றடைந்த நாகராஜா, அங்கு ‘தி கீய்ஸ்’ என்ற இசைக்குழுவுக்குத் தலைமையேற்கிறார்.
பல தலைமுறைகளை தனது இசையால் கவர்ந்த டார்க்கி நாகராஜா, அதற்காக எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், அவரது சாதனைகளின் பின்னணியில் உள்ள தியாகங்கள் ஆகியவற்றை ஆழமாக அலசி ஆராய்ந்து எடுத்துரைக்கும் படமாக இது இருக்கும்.
மேலும், இன்றைய இளம் தலைமுறைக்கு நல்ல வழியைக் காட்டும் தரமான படைப்பாகவும் இருக்கும். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும்,” என்கிறார் இயக்குநர் விக்ரம் லட்சுமணன்.