வாழ்வதே பலருக்கு வலியாக இருக்கிறது. தனக்கு நோய் இருப்பதே தெரியாமல் வாழ்வது, சிகிச்சைக்கான பணமின்றி நோயுடன் வாழ்வது, அறுவை சிகிச்சைக்குப் பயந்து போராடுவது எனப் பல காரணங்களுக்காக மக்கள் நோயுடன் வாழ்வது வாழ்க்கையாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் மக்கள் கல்லீரல் சார்ந்த நோயுடன் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நோயாளிகளில் ஏறக்குறைய 30 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளனர்.
அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சனும் அவர்களில் ஒருவர். கடந்த 40 ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்ற இந்த நடிகர், தன்னைப் பாதித்த நோய் மேலும் பரவாமல் தடுத்து வாழ்கிறார்.
1986ஆம் ஆண்டு ‘கூலி’ இந்திப் பட சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அமிதாப்புக்கு ஒரு மேசையின் மீது உருண்டு இறங்குவது போன்ற ஒரு காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது.
காட்சியைப் படமாக்கியபோது, மேசையின் கூர்மையான முனைப்பகுதி ஒன்று அமிதாப்பின் அடிவயிற்றில் குத்திவிட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் அபிமான நடிகருக்கு ரத்த தானம் செய்தனர்.
அமிதாப்புக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால், கல்லீரல் நோய் பாதித்த ஒருவர் கொடுத்த ரத்தம் என்பதால், அமிதாப் பச்சனையும் அந்த நோய் தாக்கியது. ஆனால், 20 வருடங்களுக்குப் பிறகுதான் இதுகுறித்து அவருக்குத் தெரியவந்தது.
இந்தச் சோகத்தில் அவர் முடங்கிவிடவில்லை. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அமிதாப்பை தென் கிழக்கு ஆசிய வட்டாரத் தூதராக நியமித்தது உலக சுகாதார நிறுவனம்.
“எனது கல்லீரல் 75% பாதிக்கப்பட்டது. மீதமுள்ள 25% கல்லீரல்தான் செயல்படுகிறது. அதை வைத்து உயிர் வாழ்கிறேன். எனவே, அனைவரும் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்துகொண்டு விழிப்புடன் வாழுங்கள்,” என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
சமந்தா
சில ஆண்டுகளுக்கு முன்பு, உடல் தசைகளைப் பாதிக்கும் ‘மயோசிடிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதற்கான சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலம் தேறிவருகிறது.
நோய் பாதித்தாலும் மனம் தளர்ந்துவிடாமல், மிக உற்சாகமாக திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு, இந்தியிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அண்மையில் சில ரசிகர்கள், ‘ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்’ என்று இவரை உருவக்கேலி செய்ய, தாம் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை வெளியிட்டு, ‘என்னைப் போல் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியுமா’ எனக் கேலி செய்தவர்களுக்குச் சவால் விடுத்துள்ளார் சமந்தா.
ராணா டகுபதி
‘பாகுபலி’ ராணா டகுபதிக்கு சிறுநீரகப் பாதிப்பும், ஒரு கண்ணில் பார்வை மங்கும் பாதிப்பும் உள்ளன. என் அலட்சியம்தான் இதற்குக் காரணம்.
“எனவே, என் ரசிகர்கள் உடல்நலம் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம்,” என்று வெளிப்படையாகப் பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ராணா.
இந்தப் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் மத்தியிலும் நடிப்பு, படத்தயாரிப்பு, பட விநியோகம் எனத் தனது பணிகளில் சோர்வு காட்டாமல் பணியாற்றுகிறார் ராணா.
பூனம் கௌர்
உடல் முழுவதும் வலியை ஏற்படுத்தும் ‘ஃபைப்ரோ மயால்கியா’ (Fibro Myalgia) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பூனம் கௌர். அடிக்கடி தூக்கமின்மை, சோர்வு ஏற்படும்.
“நோய் வந்துவிட்டது என்பதற்காக புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே, என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தி வருகிறேன்,” என்கிறார் பூனம் கௌர்.
மம்தா மோகன்தாஸ்
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.
இப்போது இவர் தோல் நிற மாற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
உடலில் வெண் புள்ளிகளை ஏற்படுத்தும் இந்த நோயின் தீவிரம், தன்னை எந்த வகையிலும் முடக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.
“என் மனதை மற்ற விஷயங்களில் ஈடுபடுத்துகிறேன். குறிப்பாக, சமூக சேவைகளில் என் நாட்டம் அதிகரித்துள்ளது.
“இதன் மூலம் உடல்நலத்தைப் பேண முடியும் என்பதுடன், எனக்கு ஆத்ம மன நிறைவும் கிடைக்கிறது,” என்கிறார் மம்தா மோகன்தாஸ்.
விஷால்
நடிகர் விஷாலுக்கு ‘ஆட்டோ இம்யூன்’ எனப்படும் நோய் எதிர்ப்பு தொடர்பான பிரச்சினை உள்ளது. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள், தனக்குத் தெரியாமலேயே மற்ற நல்ல செல்களைத் தாக்கி அழித்துவிடும்.
இத்தகைய சிக்கலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடல் நடுக்கம், முடக்கத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்புடனேயே படங்களில் நடித்து வந்தவர், தற்போது அதிலிருந்து மீண்டுவரப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அஜித்
நடிகர் அஜித் உடலில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன.
முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் நடிகர் அஜித்.
‘ஆரம்பம்’ படப்பிடிப்பின்போது, ஒரு வாகனத்தில் இருந்து மற்றொன்றுக்கு தாவும் காட்சியில் நடித்த அஜித்துக்கு, கால் சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது, வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். அந்தக் காயத்துக்கு இப்போது வரை மருந்து போட்டுவருகிறார். இப்போதும்கூட அந்த வலியுடன்தான் சினிமா, கார் பந்தயம் என்று சாதித்து வருகிறார் அஜித்.
கமல்ஹாசன்
கமல் தனது மேல் மாடி அலுவலகத்தில் இருந்து கீழே உள்ள வீட்டுக்கு மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, கால் இடறி விழுந்ததில், கால் எலும்பு முறிந்தது.
அந்த முறிந்துபோன எலும்பைச் சரிசெய்ய, உள்ளே ‘எவர்சில்வர்’ கம்பி பொருத்தப்பட்டுள்ளது.
‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் சண்டை போடும் காட்சியில், வில்லனைப் பார்த்து, ‘என் காலை வெட்ட முடியாது. மெட்டல் எலும்பு பொருத்தப்பட்டுள்ளது’ என்று வசனம் பேசுவார் கமல்.
இப்படி, தன் வலியையும் பொருட்படுத்தாமல், தனது நகைச்சுவையைப் பதிவு செய்திருப்பார் கமல்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கலைஞன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது, இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கமல்.
உடல் எங்கும் எலும்பு முறிவுகள் கொண்ட, உலக கலைஞர் ஜாக்கி சானை ஒருமுறை சந்தித்தபோது, ‘உங்கள் உடலில் எவ்வளவு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன’ என்று கமல் கேட்டதுடன், ‘எனக்கு இத்தனை முறை ஆனது’ என்றும் கூறினாராம்.
அதைக் கேட்ட ஜாக்கி சான், சிரித்துக்கொண்டே, ‘அப்படியா, நெருங்கிவிட்டீர்கள். நான் மீண்டும் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கிறது’ என்று கூறினாராம்.
சல்மான் கான்
ஒருவித நரம்பு நோயால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இந்தி நடிகர் சல்மான் கான்.
ஆனால், அதனால் ஏற்படக்கூடிய வலியைப் பொறுத்துக்கொண்டு திரையுலகில் தாம் கடுமையாக உழைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
‘டிரைஜிமினல்’ என்ற நரம்பு பாதிக்கப்படும் ஒருவரால் தனது முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்த இயலாது. மேலும், குறிப்பிட்ட நரம்பு சேதமடைவதால் முகத்தின் ஒரு பக்கத்தில் திடீரென மின்சாரம் தாக்கியது போன்ற கடுமையான வலி உண்டாகும். இந்த வலி சில நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை நீடிக்கக்கூடுமாம்.
எனவே, முகத்தாடை, கன்னம், மூளை, கண்கள் உள்ளிட்ட முக உறுப்புகளைப் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு உண்டு என்றாலும், மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார் சல்மான் கான்.
“59 வயதாகும் நான் நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது செயல்பாடுகளையும் உழைப்பையும் நிறுத்தவில்லை,” என்று ‘தி கிரேட் இண்டியன்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது குறிப்பிட்டார் சல்மான் கான்.