இந்தித் திரையுலகில் பலரும் பல கோடிகளை சம்பளமாகப் பெறுவது தெரிந்த தகவல்தான். எனினும் தற்போது பாலிவுட்டில் நடிகை கிரித்தி சனோன் குறித்துதான் பலரும் அதிகம் பேசுகிறார்கள்.
காரணம், அவர் அண்மையில் வாங்கியுள்ள சொகுசு பங்களாதான். அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.78 கோடியாம்.
மொத்தம் 7,300 சதுர அடி கொண்ட இந்தப் பங்களாவில், ஏழு பெரிய அறைகள் உள்ளனவாம். ஆறு கார்களை நிறுத்துவதற்கு இடம் உள்ளது. மேலும் விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கு தனி வசதிகள் உள்ளன. இது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள பங்களா.
தெலுங்குப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன் பின்னர் இந்தியில் முன்னணி நாயகியாக வளர்ந்துள்ளார்.
‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-4’, ‘மிமி’, ‘ஆதிபுருஷ்’ என இவரது படப்பட்டியல் நீள்கிறது. அண்மையில் தனுஷுக்கு ஜோடியாக ‘தேரே இஷ்க் மே’ இந்திப் படத்தில் நடித்துள்ள கிரித்தியின் புதுப் பங்களா மும்பை, பாந்த்ரா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

