கவின் நடித்த ‘கிஸ்’ படம் வெளியாகி உள்ளது. நடனப் பயிற்சியாளர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது.
தனது நடிப்பில் உருவாகியுள்ள ஆறாவது படம் ‘கிஸ்’ என்றும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் ஆதரவு மெல்ல அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார் கவின்.
சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்றன. அதேபோல் இந்தப் படமும் மெல்ல மெல்ல வரவேற்கப்படும்.
“தற்போது படத்தைத் திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படம் பார்த்தவர்களின் வாய்மொழிப் பாராட்டால் மேலும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
“படம் பார்த்த அனைவருமே தங்களுக்குப் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளனர். எனது முந்தைய படங்களுக்கு எப்படி ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்தீர்களோ, அதை இந்தப் படத்துக்கும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் கவின்.
அப்போது செய்தியாளர் ஒருவர், படம் வெளியான இரண்டாவது நாளே கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுகிறீர்களே, இது சரிதானா என்று கேட்க, கவினும் சமாளிக்காமல், அசராமல் பதிலளித்தார்.
“நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். பிறகு சமூக ஊடகங்களில் கேலியும் கிண்டலும் செய்வார்கள், ஒருவழியாக்கி விடுவார்கள் என்றுகூட தடுத்துப் பார்த்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், இந்தத் திரையரங்கத்தில் உள்ள நண்பர் எதையும் கேட்பதாக இல்லை. இது என் நண்பர் செய்த ஏற்பாடு. நீங்கள் சொல்வதுபோல் தவிர்த்திருக்கலாம்,” என்றார் கவின்.
‘கிஸ்’ படத்தில் ‘அயோத்தி’ படப் புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி தன் குரல் மூலம் (வாய்ஸ் ஓவர்) பங்களித்துள்ளார்.
‘லிஃப்ட்’ படத்தில் தொடங்கி ‘டாடா’ வரை கவினின் திரைப்பயணம் சீராக உள்ளது. தற்போது ‘கிஸ்’ படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
இப்படத்தில் நடிக்க கவின் அதிக ஊதியம் கேட்டதாகவும் இதனால் தயாரிப்பாளர் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் முன்பு தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்புத்தரப்பு இதை மறுத்த நிலையில், படம் நல்லவிதமாக முடிவடைந்து திரைகண்டுள்ளது.

