நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் இயக்குநராகிறார் என்று அண்மையில் வெளியான தகவல் உண்மையாகிவிட்டது. அது மட்டுமல்ல, தாம் இயக்கும் படத்தின் நாயகனாக நடிப்பதும் அவர்தான்.
கென் கருணாசுக்கு இப்போது 24 வயதாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர் ‘வாத்தி’, ‘விடுதலை’ ஆகிய படங்களிலும் தனது நடிப்பால் முத்திரை பதித்தார்.
விடுதலை 2 படத்தில் நடித்ததும் கென்னுக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பின்னர், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றார்.
இந்நிலையில், கென் இயக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் கதையைத்தான் கென் கையாள்வதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்ரீதேவி, அப்பல்லா, அனிஷ்மா என மொத்தம் மூன்று கதாநாயகிகளும் நடிக்க இருக்கின்றனர்.
அடுத்த சில நாள்களில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகனை இயக்குநராக்க, நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தாமே தயாரிக்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கென் குழந்தை நட்சத்திரமாகவும் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர். அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பங்களித்துள்ளார்.
தனது மகனின் திரைப்படம் சார்ந்த விஷயங்கள் தொடர்பில் தாம் எந்த வகையிலும் தலையிடுவதில்லை என்றும் கென் பக்குவமான நடிகராகிவிட்டதால் அவர் அடுத்து இயக்குநராக விரும்புவதில் தவறில்லை என்றும் தந்தை கருணாஸ் வாழ்த்தி உள்ளார்.

