ஆனந்த விகடன் ஊடகம் ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கி தமிழ்த் திரையுலகத்தினரைக் கொண்டாடுகிறது.
சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குநர் என விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தேறும். இந்த ஆண்டு விருது விழா நட்சத்திரங்களின் வருகையால், பேச்சால் களைகட்டியது.
‘பெஸ்ட் எண்டர்டெய்னர்’ (Best Entertainer) விருதினை ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காகப் பெற்றார் நடிகர் கார்த்தி. இந்த விருதினை இயக்குநர் வெற்றிமாறன் அவருக்கு வழங்கினார்.
அதன் பின்னர் பேசிய கார்த்தி, மெய்யழகன் திரைப்படத்தில் நடித்தது மிக சுகமான அனுபவம் என்றார்.
“முதலில் இயக்குநர் பிரேம்குமாருக்கு என் நன்றி. 1970களில் இருந்து 1990கள் வரை வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அழகாக எழுதியிருந்தார். கதையைச் சொன்ன உடனேயே அதைப் படமாகத் தயாரிக்க முன்வந்த, ‘2டி என்டர்டெயின்மென்ட்’ என் அண்ணா சூர்யாவுக்கு அடுத்த நன்றி.
“நான் இந்தப் படத்தை எந்த அளவுக்கு நேசித்தேனோ, அந்த அளவிற்கு இதை நேசித்த என்னுடைய ‘அத்தான் அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி.
“அரவிந்த்சாமியுடன் பேசுவதே மிகப்பெரிய பாடம், அனுபவமாக இருக்கும். இன்றைக்கு நமக்கு பிடித்தவர்களுடன் நிறைய விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லை. அதை இந்தப் படத்தில் அழகாக அலசியுள்ளார் இயக்குநர்.
“இந்தப் படத்தை எப்போது தொடங்கினோம், எப்போது முடித்தோம் என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு அழகான படமாக அமைந்தது,” என்றார் கார்த்தி.
தொடர்புடைய செய்திகள்
‘மகாராஜா’, ‘விடுதலை 2’ படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
அவருக்கான விருதை இயக்குநர் ராம் வழங்கினார்.
அப்போது பேசிய ராம், “எல்லாரும் அனைத்துலக கதாநாயகன் என்று சில நடிகர்களைக் குறிப்பிடுவார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து, தமிழ் சினிமாவிலிருந்து உலகம் முழுவதும் நடிப்புக்காகத் தெரியக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவர் கால்கள் தரையில் பதிந்திருப்பதால், அவர் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தெரிகிறார்,” என்று பாராட்டினார்.
விருது பெற்ற விஜய் சேதுபதி பேசும்போது, தனக்கும் இயக்குநர் ராமை முதல் சந்திப்பில் இருந்தே மிகவும் பிடிக்கும் என்றார்.
வீட்டில் அப்பாவின் சட்டை, அம்மாவின் சமையல் வாசனையைப் போல் ஆனந்த விகடன் புத்தக வாசனையும் தமக்கு மிகவும் நெருக்கமானது என்றார் அவர்.
“எனக்கு ‘மகாராஜா’வில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நித்திலனுக்கும், `விடுதலை’யில் வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறனுக்கும் நன்றி. `வாத்தியார்’ கதாபாத்திரத்தை அவர் எழுதியதை மிகவும் வியப்பாகப் பார்த்தேன். அப்படி வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து, அவர்களாகவே மாறி நடித்ததை பெரிய வரமாக நினைக்கிறேன்.
“தலைவர்கள், வீட்டில் இருப்பவர்களின் நினைவாக, நம் வீடுகளில் அவர்களுடைய புகைப்படங்களை வைப்போம். அந்த மாதிரி இந்த விருதைப் பார்க்கும்போதெல்லாம் இது கிடைப்பதற்கு காரணமாக இருந்த படத்தையும் அதில் நடித்தபோது நடந்த விஷயங்களையும் மனதிற்குள் அசைபோடுவேன்,” என்றார் விஜய் சேதுபதி.