‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் விரும்பி நடித்த படம். அவர் சிறுவயதில் பார்த்த கட்டபொம்மன் பற்றிய தெருக்கூத்தால் ஈர்க்கப்பட்டு தமது சிவாஜி நாடக மன்றத்துக்காக சக்தி கிருஷ்ணசாமியைக் கதை, உரையாடல் எழுதச் சொல்லி நடித்த நாடகம். அதைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் பி ஆர் பந்துலுவும் அதைத் திரைப்படமாக எடுத்தார். அதில் நடிகர் திலகத்தின் நடிப்பு, சக்தி கிருஷ்ணசாமியின் கனல் தெறிக்கும் வசனம் எல்லாமாகச் சேர்ந்து படத்தை புகழின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு சென்றன.
சிவாஜி கட்டபொம்மனில் நடிக்க ஏற்பாடாகி இருந்த அதே காலகட்டத்தில் அதற்குப் போட்டியாக தானும் ஒரு படம் எடுக்க கவிஞர் கண்ணதாசன் விருப்பம் கொண்டார்.
அந்த விருப்பத்தில் உருவான படம்தான், அவர் தயாரிப்பில், முழுக்க முழுக்க அவரது கதை, உரைநடை, பாடல்களுடன் உருவான படம் ‘சிவகங்கைச் சீமை’. நடிப்பில் சிவாஜியைப் போலவே தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் தமிழில் வசனம் பேசி நடிக்கக்கூடியவர் இலட்சிய நடிகர் என்ற பெயருடன் விளங்கிய எஸ் எஸ் ராஜேந்திரன். அவரும் தீப்பொறி பறக்க வசனம் பேசி வீராவேசத்துடன் படத்தில் நடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வெளியானது. சிவகங்கைச் சீமை படம் அதே ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியீடு கண்டது.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின் அவரது சகோதரர் ஊமைத்துரை தப்பித்து சிவகங்கையை ஆட்சி புரிந்த மருது பாண்டியர்களிடம் அடைக்கலம் அடைந்தார். அதைக் காரணமாக வைத்து, மருது பாண்டியர்களும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போர் புரிந்ததால், சிவகங்கை மீது தாக்குதல் நடத்தி இறுதியில் மருது பாண்டியர்களை வெள்ளைக்காரர்கள் வெற்றி கொள்வதுதான் கதை.
அந்தப் படத்தை வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் போட்டியாகவே, பிடிவாதத்துடன் அதே சமயத்தில் திரையிட்டார் கண்ணதாசன். ஆனால், படம் படுத்துவிட்டது. அது மட்டுமல்ல, படத்தை விமர்சித்த குமுதம் பத்திரிகை விமர்சகர் ஒருவர் அதை சிவகங்கை மீசை என்று வர்ணித்தார். படத்தில் வரும் எஸ் எஸ் ஆர், டி கே பகவதி, பி எஸ் வீரப்பா, எம் கே முஸ்தபா என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுமே தடித்த, கறுத்த மீசையுடன் தோன்றியது, படத்தின் மற்ற அம்சங்களைவிட, அந்த விமர்சகர் கண்களை உறுத்தியுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரின் நடிப்பும் சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, ஜாவர் சீதாராமன், ஏ கருணாநிதி போன்றவர்கள் நடித்த கட்டபொம்மன் படத்திற்கு அருகே வரமுடியவில்லை. மேலும், வண்ணப் படக்காட்சி அமைப்பும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்[Ϟ]டி[Ϟ]யது.
சிவகங்கைச் சீமை படம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஈடல்ல என்றாலும் அதை ஒரு இரண்டு மாதம் கழித்து வெளியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், படத்தை தான் சார்ந்த திமுக கட்சித் தலைவர் அறிஞர் அண்ணாவிடம் சிறப்புக் காட்சியாகப் போட்டுக் காண்பித்தார் கவிஞர். படம் முடிந்தவுடன் அது வெற்றி பெறவில்லை என்று ஆதங்கத்துடன் கூறிய கவிஞரைப் பார்த்து அண்ணா, ‘எல்லாம் சரிதான், படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன், பி எஸ் வீரப்பாவுடன் சண்டைபோட்டு வெற்றி பெறுவதுபோல் எடுத்துள்ளாயே அதை எப்படி நம்புவது,” என்று கேட்டார். ஆம், எஸ் எஸ் ஆர் தோற்றத்திற்கும் வில்லன் நடிகர் வீரப்பாவின் தோற்றத்திற்கும் ஈடு, இணை கிடையாது. இதைக் கேட்ட பின்னர்தான் காட்சி அமைப்பு, நடிகர் தேர்வு என மற்ற அம்சங்களிலும் தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று கவிஞருக்குத் தோன்றியது.
எதிலும் அவசரத்துடன் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று உணர்ச்சி பொங்க செயல்படக்கூடிய கவிஞர், இதிலும் அவசர, அவசரமாகப் படத்தை எடுத்து அதை அவசர அவசரமாக வெளியிட்டு தனக்கே சூடுபோட்டுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.