புதுடெல்லி: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்தநாள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழைப் போற்றி வருகின்றனர்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பயணத்தில் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கியதாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“அவரது உயரிய சிந்தனைகளும் சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இயக்கத்தின் உயர்ந்த மனிதர்களில் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராஜர், சமூக நீதிக்கான அயராத போராளியாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.
“காமராஜரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட மதிய உணவுத் திட்டம், தடைகளைத் தகர்த்தெறிந்து, பின்தங்கியவர்களுக்கு கல்வியை எட்டக்கூடியதாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்ததாக இருந்தது.
“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது,” என்றும் கார்கே மேலும் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் அமைத்த முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்குப் புகழாரம் சூட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று !கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார்.