‘ஜெயிலர்-2’ படம் எப்போது வெளியாகும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். ஆனால், படத்தின் தயாரிப்புத்தரப்பு இதுகுறித்து மூச்சுகூட விடவில்லை.
அநேகமாக, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்திரைப் புத்தாண்டையொட்டி படம் வெளியீடு காணும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, ‘ஜெயிலர்-2’ படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக ஏறக்குறைய ஐந்து மாதங்கள் தேவைப்படுகிறதாம்.
நெல்சல் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா, சூராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரஜினி வெளியிட்ட இத்தகவல், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

