திரைத்துறை மீதான கவர்ச்சி, ஆர்வம் காரணமாக மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பலர் தங்கள் தொழில், நல்ல வேலை என்று அனைத்தையும் இழந்தும்கூட, திரையில் ஒருமுறை தோன்றினால் அது மட்டும் போதும் என நினைக்கிறார்கள்.
அப்படித்தான் இயக்குநர் பிரகபல். எம்பிஏ பட்ட மேற்படிப்பை முடித்தவர். பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பார்த்து வந்த நல்ல வேலையை உதறிவிட்டு சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டாராம்.
பிரகபல் இயக்கிய முதல் வசூல் படம் ‘மட்டி’ (Mudddy). வசூல் ரீதியில் சாதிக்கவில்லை என்றாலும், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
“மதுரையில் உள்ள மலைக்காடுகளில் சேறு, சகதியில் நடத்தப்படும் ‘மட்’ (mud) பந்தயம் மிகவும் பிரசித்தம். பலர் இதைப் போட்டியாகக் கருதுகிறார்கள். நான் இதை ஒரு விளையாட்டாக நினைக்கிறேன். இந்தப் படம் இந்தியா மட்டுமல்லாமல் எல்லாருக்குமே பிடித்தமானதாக இருக்கும்,” என்கிறார் பிரகபல்.
முதல் படம் கொடுத்த துணிச்சலும் நம்பிக்கையும்தான், அடுத்து ‘ஜாக்கி’ என்ற படத்தை இயக்க உந்து சக்தியாக அமைந்ததாம். முதல் படத்துக்காக இந்தியா முழுவதும் அலைந்து பல தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தவர், மதுரைக்கு வந்து சேர்ந்த போதுதான் அடுத்த படத்துக்கான கதைக்கரு கிடைத்தது என்கிறார்.
அந்த ஊரில் நடைபெற்ற கிடா சண்டையைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்கிறார்.
“பயம் தெளிந்த பிறகுதான் அது வெறும் கிடா சண்டை மட்டுமல்ல, அந்தச் சண்டைக்குள் அழகான ஒரு வாழ்வியலும் கிடாவை வளர்க்கும் கட்டாரிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பும் இருப்பது தெரிந்தது.
“இது தமிழ் சினிமாவுக்கு புதுக்களமாக இருக்கும் எனத் தோன்றியது,” என்று கண்கள் மின்னச் சொல்கிறார் பிரகபல்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் ‘மட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தைதான் எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ‘ஜாக்கி’க்கான கதை முழு வடிவம் பெற்றதும் ‘மட்டி’ யின் இரண்டாம் பாகத்தை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளார்.
“கிடா வளர்ப்பவர்களைக் ‘கட்டாரி’ எனக் குறிப்பிடுகிறார்கள். மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கிடா சண்டைக்கு பலத்த வரவேற்பு உள்ளது. வெற்றிபெறும் கிடாக்களுக்கு தங்கம், வெள்ளி, கார், இருசக்கர வாகனங்கள் என விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.
“வெற்றி, தோல்வி குறித்து கட்டாரிகள் கவலைப்படுவதில்லை. தோற்றுவிட்ட கிடாக்களைத் துன்புறுத்தாமல் பாசத்துடன் பாதுகாக்கிறார்கள். ஒருசிலர் தங்கள் கிடா இறந்துவிட்டால், அதன் புகைப்படத்தை வைத்துப் பூசைகூட செய்வதுண்டு.
“இப்படிப்பட்ட கிடா சண்டையைச் சூதாட்டம், சட்டத்துக்குப் புறம்பானது என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது தவறு. நான் பார்த்து, கேட்ட சம்பவங்களைத் தொகுத்து ‘ஜாக்கி’ கதையை எழுதியுள்ளேன்.
“எனக்குத் தெரிந்த கட்டாரிகள் சிலர் ஐடி துறையில் பார்த்து வந்த நல்ல வேலையை உதறிவிட்டு, முழுநேரமாக கிடா வளர்க்கிறார்கள்.
“எங்கெல்லாம் உணர்வுகள் அதிகம் இருக்குமோ வன்முறையும் இருக்கும். இந்த கிடா சண்டையும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்கிறார் பிரகபல்.
‘ஜாக்கி’யில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர்.
“யுவன் ஜோடியாக அம்மு அபிராமி இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார்.
கிடாக்களுடன் பழகுவது கைகால் உடையவும் பெரிய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. மரணம்கூட ஏற்படலாம்.
ஆனால், யுவனும் ரிதானும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். அம்மு அபிராமியின் திறமை இந்தப் படத்தின் மூலம் இன்னும் அதிகமாகப் பேசப்படும்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் கூறினார் பிரகபல்.

