ரஜினியின் ‘கூலி’ படத்தில் அவருடன் படம் முழுவதும் வரக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாறன். ‘லொள்ளு சபா’ மாறன் என்று ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர்.
‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் நடிகர் சந்தானத்துக்கு தொடக்கத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில்தான் இப்போதும் தனது படங்களில் மாறனையும் இணைத்துக் கொள்கிறார் சந்தானம்.
மாறனுக்கு இப்போது ஏறுமுகம்தான். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மிளிர்ந்து வருகிறார்.
“நான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காமெடி பஜார்’ நிகழ்ச்சியில் எட்டு ஆண்டுகள் பங்கேற்றேன். இப்போது நகைச்சுவைக்காக செய்யப்படும் அனைத்து விஷயங்களையும் நான் முன்பே கையாண்டுவிட்டேன். அவை அனைத்துமே எனது சொந்த முயற்சி. சொந்த நகைச்சுவை. அவற்றை எல்லாம் இப்போது காட்சிப்படுத்தினாலும் சிரிப்பு தாங்க முடியாது,” என்கிறார் மாறன்.
திறமை உள்ளவர்களைக் கைவிடாமல் தமிழ் சினிமா தன்வசப்படுத்தியிருப்பது கண்கூடு. அவர்களில் மாறனும் ஒருவர். அடுத்தடுத்து தன் நகைச்சுவையை, குணச்சித்திர நடிப்பை கோடம்பாக்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருப்பதுதான் மாறனின் வெற்றி.
‘ஏ1’, ‘டிக்கிலோனா’, ‘ஜெ.பேபி’, ‘கூலி’ என அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்தவர், இதுதான் தனக்கான நேரம் என்கிறார்.
“வாழ்க்கையை அதன் உண்மைத்தன்மையோடு கொண்டுவந்து திரையில் காட்ட இன்றைய இயக்குநர்கள் முயற்சி செய்கிறார்கள். ‘அட, நம்ம மாறன் வேறு மாதிரி புதிதாகத் தெரிகிறானே’ என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“எல்லாம் நல்ல மாதிரியாக அமைந்து, ஒரே அலைவரிசையில் வந்தால் ஓர் இடத்தை தொடுமல்லவா, அதுதான் இப்போது நடந்திருக்கிறது. அதனால்தான் என் முகம் இப்போது வேறு மாதிரி தெரிகிறது,” என்கிறார் மாறன்.

