கடும் வெயிலில், காலில் கொப்புளத்துடன் நடனமாடியது வீணாகவில்லை: பூஜா பூரிப்பு

2 mins read
50b01a5f-c1e4-4fe9-a187-45768d9b2af9
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

ரஜினி ரசிகர்களும் இசைப்பிரியர்களும் தற்போது விரும்பிக் கேட்கும் பாடல் என்றால், அது ‘கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடல்தான்.

ரஜினி படப் பாடல் என்பதால் மட்டுமல்ல, நடிகை பூஜா ஹெக்டே இந்தப் பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகிவிட்டது.

சென்னை துறைமுகப் பகுதியில், வெயில் கொளுத்தும் வேளையில் இப்பாடலைப் படமாக்கி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் பூஜா.

அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஷ்ருதிஹாசன், ஃபகத் ஃபாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த ‘கூலி’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ என்ற பாடல், கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்பாடலுக்காக பூஜா ஹெக்டேவும் சௌவின் ஷாஹிரியும் போட்டுள்ள குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் திரைப்பயணத்தில் எதிர்கொண்ட, உடல் ரீதியில் கடினமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் ஆகியவற்றுடன் எனது முழு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. எனவே, ‘மோனிகா’வுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன்.

“தசைநார் பாதிப்புக்குப் பின்னர், கடினமான நடன அசைவுகள் கொண்ட பாடலுக்கு நான் ஆடியுள்ள நடனம் கவர்ச்சியாகவும் நன்றாகவும் இருப்பதில் மகிழ்ச்சி. அதைத் திரையரங்குகளில் பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

“மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோதும்கூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலையும் ஊக்கத்தையும் அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள்,” என்று குறிப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

குறிப்புச் சொற்கள்