தனி ஒரு நபராகச் செயல்பட்டு, முழு திரைப்படத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
அந்தப் படத்தின் தொழில்நுட்பப் பணிகள், தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, இயக்கம் என அனைத்தையும் இவரே கவனித்துள்ளார். அதுமட்டுமல்ல, படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடித்துள்ளார்.
‘ஒன் மேன்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகி, நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அடிப்படையில் இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். அங்கு நடிக்கும் அனைவருமே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்வார்கள். அந்தப் பயிற்சியும் அனுபவமும்தான் தனித்துப் படமெடுக்க ஊக்கம் அளித்ததாகச் சொல்கிறார் ராஜ்குமார்.
“இதற்கு முன்பு நான் உருவாக்கிய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களும் தனித்து எடுக்கப்பட்ட சுயாதீனப் படங்கள்தான்.
“கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்கள் மனத்தில் ஒரு படத்தை இடம்பெற வைக்க முடியும் எனப் புரிந்துகொண்டுள்ளேன். இதுபோன்ற படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும்.
“இப்படத்தின் கதை ஏற்காடு பகுதியில் தொடங்கி, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கா என்று பல்வேறு பகுதிகளில் நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன்,” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
இந்தப் பட வேலைகளை ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும் மக்களுக்கு இதில் நல்ல கருத்தைக் கூறியதாகவும் சொல்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

