இந்திய ராணுவத்தைப் போற்றும் திரைப்படங்களில் நடிக்க தாம் ஆவலாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.
அண்மையில் இவருக்கு இந்திய அரசு ‘தாதாசாஹேப் பால்கே’ விருது அளித்து கௌரவித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் கௌரவ ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவியை வகித்து வருகிறார் மோகன்லால்.
இந்நிலையில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை டெல்லியில் சந்தித்துப் பேசிய அவருக்கு, பின்னர் ஏழு தளபதிகள் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், தலைமைத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெற்றதை மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
“இந்தப் பாராட்டுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருதும் ஒரு காரணம். கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக, ‘டிஏ’ பட்டாலியனில் செயல்திறனை எப்படி அதிகரிப்பது, நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் உரையாடல்களை நடத்தினோம்,” என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.