இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர், தாத்தாவைப் பின்பற்றி இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் தாம் இசையமைத்துப் பாடியுள்ள ‘ஓம் நமசிவாய’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார் யத்தீஸ்வர்.
இளையராஜாவைப் போன்றே பேரனும் சிவ பக்தராம். அதனால்தான் முதல் பாடலைக் கடவுளைப் போற்றிப் பாடும் பாடலாக அமைத்துள்ளாராம்.
மேலும், தனது தாத்தா அடிக்கடி செல்லும் வழிபாட்டுத் தலமான திருவண்ணாமலையிலேயே அந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
“சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் அதிகம். எனது முதல் பாடல் பக்தி மணத்துடன் இருக்கவேண்டும் என விரும்பினேன்.
“இப்பாடல் குறித்து தாத்தா சில ஆலோசனைகளை வழங்கினார். அப்பா கார்த்திக் ராஜா பாடல் வரிகளில் உதவினார். அப்பா, தாத்தா வரிசையில் நானும் இசையமைப்பாளராகப் பெயரெடுப்பேன்,” என்கிறார் யத்தீஸ்வர்
இளையராஜா குடும்பத்தில் அவரைத் தவிர கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி ஆகியோரும் இசையமைப்பாளர்களாக உள்ளனர். மறைந்த மகள் பவதாரிணியும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது அதிகமான பக்திப் பாடல்களைக் கேட்டதன் விளைவாக, யத்தீஸ்வரும் அதுபோன்ற பாடலை உருவாக்க விரும்பியதாகப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார் கார்த்திக் ராஜா.

