விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ படம் குறித்து அவ்வப்போது சுவாரசியமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், இதோ ஓர் அண்மைத் தகவல்.
அந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார். குறிப்பிட்ட ஒரு காட்சியில் விஜய் அமைச்சரைக் கைது செய்ய அவரது வீட்டுக்கே செல்கிறார். பிறகு அமைச்சர் கழுத்தில் ஒரு துண்டைப் போட்டு தரதரவென இழுத்துச் செல்வாராம்.
இப்படித்தான் இந்தக் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் எச்.வினோத். இதேபோன்ற ஒரு காட்சி ‘பகவன் கேசரி’ என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், படப்பிடிப்பின்போது திடீரென மனதை மாற்றிக்கொண்டாராம் இயக்குநர்.
துண்டுக்குப் பதிலாக, ஒரு சாட்டையுடன் பிரகாஷ் ராஜ் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கழுத்தில் சாட்டையைச் சுற்றி, விஜய் இழுத்துச் செல்வதாக காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் இக்காட்சிப் படமாக்கப்பட்டதும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைத்தட்டி பாராட்டியுள்ளனர். கண்டிப்பாக, விஜய் ரசிகர்களை இந்தக் காட்சி உசுப்பேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, இந்தக் காட்சிக்கு முன்போ அல்லது பிறகோ காலஞ்சென்ற நடிகர் எம்ஜிஆரின் ‘நான் ஆணையிட்டால்...’ பாடல் ஒலிக்குமாம். அந்தப் பாடலைப் பயன்படுத்த அனுமதி பெற்று, ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளனர்.
விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், சரியான நேரத்தில் மிகச் சரியான பாடல் என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.
இடித்துத் தள்ளப்படும் விஜய் வீடு
நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வசித்து வந்தார். அவர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த பின்னர், சாலிகிராம வீட்டில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குடிவந்தார். அதன் பிறகு அவருக்கு வெற்றிகள் குவிந்தன. விஜய் வீட்டிலேயே குடும்பத்துடன் வசித்ததுடன், அங்கேயே தனக்கென ஓர் ஒலிப்பதிவுக் கூடத்தையும் அமைத்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், மிகவும் ராசியான அந்த வீட்டில் இருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டாராம் விஜய் ஆண்டனி.
தொடர்புடைய செய்திகள்
அதே பகுதியில் உள்ள, நடிகை ரம்பாவுக்குச் சொந்தமான வீட்டில்தான் தற்போது விஜய் ஆண்டனி குடியேறியுள்ளார்.
‘ஏன் அந்த வீட்டை மாற்றிவிட்டீர்கள்?’ எனப் பலரும் கேட்க, அவர் இதுவரை வாய் திறக்கவே இல்லை. ஆனால் விஷயம் இதுதான்.
விஜய் வாழ்ந்து வந்த சாலிகிராமம் வீட்டை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட முடிவு செய்துள்ளாராம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதையறிந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள், “நாளை எங்கள் தளபதி எந்த இடத்தில் எந்தப் பொறுப்பில் இருப்பார் என்பது தெரியாது. ஒருவேளை அவர் பெரிய பதவியை அடைந்தால் வரலாற்றில் அவர் பெயர் இடம்பெறும். அப்போது அவர் வாழ்ந்த வீடு இதுதான் என்று சொல்வதற்கு இந்த வீடு இருக்க வேண்டும். எனவே, இடித்துவிடாதீர்கள்,” என்று எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம்.

