நம் வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ‘டியூட்’ படம் என்கிறார் அதன் நாயகன் பிரதீப் ரங்கநாதன்.
‘லவ் டுடே’ படத்தில் 70% நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருந்தது எனில், ‘டியூட்’டில் அதே அளவிலான காட்சிகள் உணர்வுபூர்வமான ஆழத்தைக் கொண்டிருக்கும் என்று அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு முன்பு ‘லவ் டுடே’ படத்தில் கடைசிப் பகுதி மட்டுமே ‘சீரியஸ்’ ஆக இருக்கும். ஆனால் ‘டியூட்’ படத்தில் இருபதாவது நிமிடத்தில் இருந்தே, அத்தகைய காட்சிகள் திரையில் தொடங்கிவிடும்.
“இது இளையர்கள், குடும்ப ரசிகர்கள் என அனைவருக்கும் ஏற்ற படம். ஆனால், உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள், வரதட்சணை சிக்கல் ஆகியவற்றைச் சந்தித்த பிறகும் உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ளும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். அது குறித்து இந்தப் படம் பேசும்,” என்கிறார் பிரதீப்.
இதுபோன்ற வேதனையான உறவுகளைப் பெண்கள் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளவர், திருமணச் சடங்கைவிட, யாரைத் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
“’லவ் டுடே’, ‘டிராகன்’ மூலம் நிறைய பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறேன். அவர்களை எல்லாம் அவ்வளவு எளிதில் இழந்துவிட முடியாது. எனவே, ரசிகர்களுக்கு முழுமையான மனநிறைவை அளிக்க வேண்டும் என்பதில் ‘டியூட்’ படக்குழு உறுதியாக இருந்தது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
‘டியூட்’ படம் எதிர்வரும் 17ஆம் தேதியன்று திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளளது. இதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க, கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். இதன் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.