ரசிகர்களின் அன்பை ஒருபோதும் தனது சுய லாபத்துக்குப் பயன்படுத்தும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் அஜித்.
தனது வளர்ச்சிக்கு ரசிகர்கள் காட்டிய அன்பும் ஆதரவும்தான் முக்கிய காரணங்கள் என்றும் ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமாகி, 33 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், தமக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய இந்திய அதிபருக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் சிபாரிசும் இல்லாமல் சுய முயற்சியால் நுழைந்து, என் பயணத்தைத் தொடங்கினேன்.
“என்மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. எனினும், திரைத்துறையில் நான் இருந்த ஒவ்வோர் ஆண்டும் முக்கியமானதுதான். சினிமா எனும் அற்புதமான பயணத்தை 33 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். எனது பயணத்தில் ஏராளமான வெற்றி, தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன்.
“நான் பல சமயங்களில் வெளியே வராமலும் அதிகம் பேசாமலும் இருந்திருக்கலாம். அதேநேரத்தில் மோட்டார் பந்தயத்திலும் முழுக் கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்கத் தவறியதில்லை. தொடர்ந்து உங்களையும் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்,” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வளர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் தனது மனைவி, பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் நன்றி கூறியுள்ளார்.
மனைவி ஷாலினிதான் தன் வாழ்வின் பலம் என்றும் அஜித் குறிப்பிட்டுள்ளார்.
“உங்களுக்கும் எனக்கும் நான் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சி செய்வேன். என் குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, 33 ஆண்டுகள் என்னைக் கொண்டாடியதற்கு நன்றி.
“காயங்கள், மீண்டு வருதல், தோல்வி, அமைதி என வாழ்க்கை என்னைப் பல விதங்களில் சோதனைக்கு உள்ளாக்கியது. நான் தளர்ந்து போகாமல், முயற்சிகளைச் செய்தது மீண்டும் வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன்,” என்று அஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

