மக்கள் மனத்தில் பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்வேன்: ‘மால்குடி’ சுபா

2 mins read
60187d1f-5c53-4a64-8dec-dffaccbb775d
‘மால்குடி’ சுபா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘மால்குடி’ சுபாவின் தனித்துவமான குரலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

இளையராஜாவின் இசையில், ‘நாடோடித் தென்றல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆல் தி டைம்’ பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சுபா.

அதன் பின்னர் ‘இந்த பஸ்ஸுதான் பிடிசி’, ‘தங்கத்தாமரை’, ‘ஊத்தட்டுமா ஊத்தட்டுமா’, ‘தைய தையா’ ஆகிய பாடல்கள் இவருக்கெனத் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கின.

கடந்த 1990களில் வெளியான இவரது ‘சிக் புக் சிக் பம்’ இசைத்தொகுப்பின் ஒலிநாடாக்கள் பத்து லட்சத்துக்கும் மேல் விற்று சாதனை படைத்தன.

அண்மைய பேட்டி ஒன்றில் தனது சிறு வயது நினைவுகளை அசைபோட்டுள்ளார் ‘மால்குடி’ சுபா.

இவரும் பிரபல கர்நாடக இசைப் பாடகியுமான ‘பாம்பே’ ஜெயஸ்ரீயும் சிறு வயதுத் தோழிகள். தனது தோழிகள் அனைவருமே பிறர்க்கு உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர்கள் என்கிறார்.

“நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். அங்குள்ள கூட்டுறவுச்சங்க குடியிருப்புப் பகுதியில் உள்ள 11 கட்டடங்களுக்கும் ஒவ்வொரு ராகத்தின் பெயரைச் சூட்டியிருந்தனர். நான் ‘சாமா’ கட்டடத்திலும் ‘பாம்பே’ ஜெயஸ்ரீ ‘பசந்த்’ கட்டடத்திலும் வசித்தோம்.

“சிறு வயதில் தீபாவளி வந்தால் கொண்டாட்டம்தான். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பட்டாசுகள் வெடிப்போம், விளையாடுவோம். என் பாட்டி முறுக்கு, அதிரசம் செய்வதில் கைதேர்ந்தவர். ஆனால் நான்தான் முறுக்குப் பிழிந்து உதவி செய்ய வேண்டும். அந்த இனிமையான நாள்களை என்றென்றும் மறக்க இயலாது.

இசைத்துறையில் அடியெடுத்து வைத்து 35 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சுபா, தமக்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

“நான் இன்று பாடகியாக உங்கள் முன் நிற்பதற்கு முக்கியக் காரணம் என் பெற்றோர்தான். திருவையாறுதான் எங்களுடைய பூர்வீகம். அப்பா வழக்கறிஞராக இருந்தார். பிறகு மும்பையில் குடியேறினோம். வீட்டில் நான் மூத்த மகள். எனக்கு இரண்டு தங்கைகள். மூன்று பேரையுமே குறை தெரியாமல் வளர்த்தார்.

“நானும் என் தங்கைகளில் ஒருவரும் அம்மா வற்புறுத்தியதால் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டோம். ஒவ்வொரு கோடைக்கால விடுமுறையின்போதும் சென்னையில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றுவிடுவோம். அப்போது சாப்பிட்டு முடித்ததும் பழைய பாடல்களைப் போட்டுவிடுவார் தாத்தா. அவற்றைக் கேட்டுக் கேட்டு அதேபோல் நானும் பாடிப் பயிற்சி பெறுவேன்.

“அப்படித்தான் தமிழ்ப் பாடல்கள் எனக்கு அறிமுகமாயின. பின்னாள்களில் தமிழ்ப் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானது எல்லாம் கடவுள் ஆசிர்வாதம்.

“கடவுள் என்னை எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதிக்க வைத்துள்ளார். மக்கள் மனத்துக்குள் பாடல்கள் மூலம் நான் என்றும் வாழ்வேன். அதுவே போதுமானது,” என்று ‘மால்குடி’ சுபா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்