தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் அசல் முகத்தைக் காட்டுவேன்: அதுல்யா ரவி

2 mins read
1f7fddac-a849-4feb-87cf-d5ab5334399b
அதுல்யா ரவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

அண்மையில் வெளியான ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை அதுல்யா ரவி.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘டீசல்’, ‘மிஸ்டர் எக்ஸ்’ உட்பட தமிழில் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இரண்டு படங்கள் இவரது நடிப்பில் வெளியீடு காண உள்ளன. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளாராம்.

அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். மண்ணுக்கேற்ற குசும்பு நிறைந்தவராம்.

“இப்போதுதான் அமைதியாகிவிட்டேன். சிறு வயதில் நான் செய்யாத சேட்டைகளோ குசும்புகளோ கிடையாது. அப்போதெல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்.

“இப்போதும் அந்த குசும்பு இருக்கிறது. ஆனால், எல்லாரிடமும் அப்படி நடந்துகொள்ள முடியாது என்பதால் நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் என் அசல் முகத்தைக் காட்டுவேன்,” எனக் குறும்பாகச் சிரிக்கிறார் அதுல்யா.

அண்மை காலமாக பல கோவில்களுக்குச் சென்று வழிபடுபவர், திடீரென ஆன்மீகத்தின் மீது தனக்கு எப்படி நாட்டம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்கிறார்.

“கோவிலுக்குச் சென்று வந்தால் ஒருவித நிம்மதியும் மனநிறைவும் ஏற்படுகிறது. அதனால்தான் அடிக்கடி செல்கிறேன்.

“படப்பிடிப்புக்காக வெளியூர், மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள கோவில்களைத் தேடிப் பிடித்துச் சென்று சாமி தரிசனம் செய்கிறேன்.

“கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என எதையும் நான் கேட்பதில்லை. அவரால் எத்தனைப் பேருக்குத்தான் கொடுக்க முடியும். ‘நல்ல அறிவைக் கொடுங்கள், நல்ல வழியையும் மக்களையும் காட்டுங்கள்’ என்பதுதான் எனது வேண்டுதலாக இருக்கும்,” என்று சொல்லும் அதுல்யா, தம்மைப் பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் குறித்து கவலைப்படுவதே இல்லை.

முன்பெல்லாம் அவற்றைப் படிக்கும்போது வேதனைப்படுவாராம். யாராவது ஒருவர் பொய்யான தகவல்களின் அடிப்படையில், தம்மிடம் அதுகுறித்து விசாரிக்கும்போது, எரிச்சலும் கோபமும் வரும் என்று சொல்பவர், போகப்போக எல்லாம் பழகிவிட்டது என்கிறார்.

“முன்பெல்லாம் கதாநாயகன், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலவற்றையும் வைத்து படங்களைத் தேர்வு செய்து வந்தேன். இப்போது கதை என்ன, எத்தகைய கதாபாத்திரம், என்னால் அதில் சிறப்பாக நடிக்க முடியுமா என்பதை எல்லாம் யோசித்துத்தான் படங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளேன்,” என்கிறார் அதுல்யா.

புரூஸ், ஃபிராங்கி, ஹீரா, சாரா என நான்கு நாய்க் குட்டிகளைச் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் அதுல்யா, ஓய்வு கிடைத்தால் அந்த நான்கு செல்லங்களுடன்தான் பொழுதைக் கழிக்கிறார்.

“வீட்டில் நான் அப்பாவின் செல்லம். கோபம், கண்டிப்பு, திட்டு என அப்பாவிடம் எதையும் பார்க்க முடியாது. அவரிடம் இருந்து எனக்கு அன்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.

“மிகவும் ஜாலியான மனிதர். அவரிடம் எதையும் மறைக்காமல் மனம்விட்டுப் பேச முடியும். அதற்கான முழுச் சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்துள்ளார். அதனால்தான் என் தோழிகள்கூட அவரைத் தந்தையாக நினைத்து, மனம்விட்டுப் பேசுவார்கள்.

“எப்போது திருமணம் எனப் பலரும் கேட்கிறார்கள். இப்போதைக்கு இல்லை என்பதே எனது பதில். காதல் திருமணமா என்பது, அது நடக்கும் போதுதான் தெரியும். எதுவாக இருந்தாலும் என் வீட்டில் சம்மதிப்பார்கள். எனவே, என் கையில்தான் முடிவு உள்ளது,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் அதுல்யா.

குறிப்புச் சொற்கள்