ரஜினியின் ‘கூலி’ படத்தில் தானும் பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் அனிருத்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், கடந்த 13 ஆண்டுகளில் தாம் 34 படங்களுக்கு இசையமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒரு ரசிகனாக கோடிக்கணக்கானோருடன் சேர்ந்து ‘கூலி’ படத்தின் வெளியீட்டுக்காகத் தானும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார் அனிருத்.
“எல்லா இசையமைப்பாளர்களுக்கும் முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பு. ‘கூலி’யில் ரஜினி மட்டுமல்லாமல், நாகார்ஜுனாவுடனும் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்துக்காக அவரைத் திரையில் பார்த்தபோது, படக்குழுவினர் எப்படி வியந்து போனோமா, அதேபோல் ரசிகர்களும் திரையில் பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவர்,” என்றார் அனிருத்.
ரஜினி திரையுலகில் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணம் இது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சுதந்திர தினத்தின் போதுதான் ரஜினியின் முதல் படம் திரைகண்டது.
இதற்கிடையே, ‘கூலி’ பட முன்னோட்டக்காட்சித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், ‘அலேலா பொலேமா’ எனும் வார்த்தைகள் ஒலிப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
‘அலேலா பொலேமா’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று தொடக்கத்தில் அனிருத்துக்கே தெரியாதாம்.
“பொதுவாக எனது ஒலிப்பதிவுக் கூடத்தில் இருக்கும்போது, ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசி, பாடிக்கொண்டிருப்பேன். அப்படித்தான் ‘அலேலா பொலேமா’ என்று பாடி, இயக்குநர் லோகேஷுக்கு அனுப்பி வைத்தேன். அதைக் கேட்டுவிட்டு, அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவரோ, தனக்கு அந்த வார்த்தைகள்தான் மிகவும் பிடித்துள்ளன என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் இருவருமே இப்படித்தான் ஒரே மாதிரியான சிந்தனையுடன், ஒரே ‘வைபு’டன் இருப்போம். பின்னர் ஒரு நாள் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் தேடியபோது, கிரேக்க மொழியில் ‘நாங்கள் சண்டைக்குத் தயார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“உண்மையில், பாடலில் பயன்படுத்தியபோது, இந்த அர்த்தம் எனக்கு அறவே தெரியாது,” என்று செய்தியாளர்களிடம் விவரித்தார் அனிருத்.
இதனிடையே, திரையுலகில் ரஜினியின் பொன் விழா ஆண்டையொட்டி, தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிருத், “’கூலி’ படத்துடன் ரஜினியின் பொன்விழா அனைவரும் கொண்டாடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

