திறமையைக் கொண்டாடும் ரசிகர்களை பிடிக்கும்: ருக்மிணி

3 mins read
07175a2d-b971-4590-964a-9264ed74b4d8
ருக்மிணி வசந்த். - படம்: ஊடகம்

திறமைசாலிகளைப் பாராட்டுவது அனைவரும் தமிழ் ரசிகர்களைப் போல் இருந்துவிட்டால், எந்தத் தரமான படைப்பும் தோல்வி அடையாது என்கிறார் நடிகை ருக்மிணி வசந்த்.

விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’படத்தில் இணைந்து நடித்த இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘விகடன்’ ஊடகப் பேட்டி ஒன்றில், ‘மதராஸி’யில் வன்முறையும் அடிதடியும் அதிகம் என்றாலும், அவற்றினூடே மெல்லிய காதல் ஒன்றையும் இணைத்துள்ளார் இயக்குநர் முருகதாஸ் என்று பாராட்டியுள்ளார். படம் எதிர்பார்த்ததைவிட மிக அருமையான படைப்பாக உருவாகி இருப்பதாகவும் மெச்சுகிறார்.

இன்றைய தேதியில் கன்னடத்தில் ருக்மிணிக்குத்தான் மவுசு அதிகம். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், தமிழில் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது இலக்கு என்கிறார் ருக்மிணி.

“நான் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் என்னை எப்படியாவது அடையாளம் கண்டு விசாரிக்கிறார்கள். தமிழ் மக்கள் கொடுக்கும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

“திறமையான கலைஞர்கள் எங்கிருந்து வந்தாலும் உயரத் தூக்கி வைத்துக்கொண்டாடுவதில் தமிழ் மக்களுக்கு நிகர் வேறு யாருமில்லை,” என்று தமிழ், தமிழர் புராணம் வாசிக்கிறார் ருக்மிணி.

‘மதராஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பகுதி இளையர்களை நிச்சயம் கவரும் என்று கூறியுள்ள அவர், முருகதாசின் பலமே இப்படிப்பட்ட தனிப்பகுதிகளை உருவாக்குவதுதான் என்கிறார்.

மேலும், காதல், நகைச்சுவை, பரபரப்பு எனப் பல்வேறு அம்சங்களும் சரியான அளவில் கலந்து சிறந்த பொழுதுபோக்குச் சித்திரத்தை வழங்குவதில் கைத்தேர்ந்தவர் என்றும் பாராட்டுகிறார்.

“ஒரு படத்தில் நடிப்பதால் நான் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் முக்கியம். மேலும், எனது கதாபாத்திரை எப்படியெல்லாம் திரையில் வெளிப்படுத்தலாம் என்றும் யோசிப்பேன். எனது கதாபாத்திரத்தின் தன்மை ஏற்கெனவே இயக்குநர் குறிப்பிட்டபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா, அதன் நிறை, குறைகள் என எல்லாவற்றையும் என் மனத்தில் நிறுத்திக்கொள்வேன்.

“ஒவ்வொரு படத்தையும் எனக்கான படிப்பினையாக எடுத்துக்கொள்வதால் சிக்கலின்றி எல்லாம் நடந்து வருகிறது. ஒரு படத்தால் நான் அடைந்த நன்மைகள், கற்றுக்கொண்ட பாடங்கள் என பெரிய பட்டியலே போட முடியும்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ருக்மிணி.

‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பைப் பார்த்து அசந்துபோன ரசிகர்களின் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ஒரு ராணுவ அதிகாரியை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருந்தார் சிவா என்றும் கூறியுள்ளார்.

“ராணுவத் தரத்தைக் கொண்டு வருவதற்கு அதன் துல்லியத்தன்மைக்குப் பெரிதும் உழைத்திருக்கிறார். அந்த உழைப்புதான் இந்தியாவே அவர் மீது கவனத்தைப் பதிக்கக் காரணம்.

“இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டுமானால், ஒரு நடிகர் தனது கதாபாத்திரமாகவே மாற வேண்டும். உண்மைக்கு மிக நெருக்கமான வகையில், நடிப்பு அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தைத்தான் சிவாவும் சாய் பல்லவியும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளனர்,” என்று ருக்மிணி தமது பேட்டியில் ரசனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் வசூலில் சாதனை படைத்த படம் ‘காந்தாரா’. தற்போது ‘காந்தாரா சாப்டர் ஒன்’ படத்தில் ருக்மிணியும் உள்ளார்.

இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவரை, ‘காந்தாரா’வில் ஆவேசமான வேடத்தில் பார்க்க முடியும்.

“கலை என்பது எந்த அளவுக்கு உயிருக்கு உயிரானது என்பதை இந்தப் படத்தின் மூலம் மேலும் உணர்ந்துகொண்டேன்,” என்கிறார் ருக்மிணி வசந்த்.

குறிப்புச் சொற்கள்