ரெஜினா கஸாண்டிரா திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது தமிழில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமது திரைப்பயணம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
“ரசிகர்கள் அன்பில் இத்தனை ஆண்டுகள் நனைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் பயணம் நீண்ட தூரமானது. இதில் இதுவரை எனது கடினமான உழைப்பைத் தந்திருக்கிறேன். ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எனது உழைப்பு முழுமையானதாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார் ரெஜினா.
சென்னையைச் சேர்ந்த இவர், கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் ‘அழகிய சுறா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’, ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்போது ‘விவ்ஸ்’, ‘செக்ஷன் 108’ என இந்தியிலும் நடித்து வருகிறார்.

