சவாலில் வெற்றி பெற்று விட்டேன்: ஆத்யா பிரசாத்

3 mins read
ddceb4c6-b846-45f4-808a-87db440ab48e
ஆத்யா பிரசாத். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார் ஆத்யா பிரசாத்.

இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி. பெற்றோர் இருவருமே துபாயில் பணியாற்றி வருகிறார்கள்.

திரையுலகம் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற சென்னை வந்தாராம் ஆத்யா. வந்த இடத்தில் இவரது கவனம் திரையுலகம் நோக்கித் திரும்பியுள்ளது.

அந்த நேரம் பார்த்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘13’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு, தமது திரைப்பயணம் எப்படி இருந்தது என்பது குறித்து அண்மைய ஊடகப் பேட்டியில் விவரித்துள்ளார் ஆத்யா.

“எனது முதல் படத்துக்கு நடிப்புத் தேர்வு நடந்தபோது, நான் நடித்த காணொளி ஒன்றை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

“தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு இருந்த பெரிய ஆசைகளில் ஒன்று. அம்மாவிடம் விவரம் தெரிவித்தேன். பிறகு நான் நடிக்க, அம்மா அதைப் படமாக்க, சுடச்சுட ஒரு காணொளியைத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்த கையோடு, என்னைத் தேர்வு செய்துவிட்டனர்.

“இதையடுத்து ‘பன் பட்டர் ஜாம்’, மலையாளத்தில் ‘சுக்ரன்’ படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானேன். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைந்ததில் பெரும் மனநிறைவு ஏற்பட்டது என்றால், மற்றொரு பக்கம் சார்லி, சரண்யா பொன்வண்ணன் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது.

“சில காட்சிகளில் மட்டுமே வந்துசெல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், முதல் படத்திலேயே நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பு அமைந்தது எனது அதிர்ஷ்டம்.

“இப்படியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழில் எனது அறிமுகப் படம் சவாலாக அமைந்தது.

“அந்தச் சவாலில் நான் வெற்றி பெற்று விட்டேன். இதை எங்கு வேண்டுமானாலும் துணிச்சலுடன் சொல்ல முடியும்.

“இப்போது மலையாளத்தில் கால்பதித்துள்ளேன். அங்கு முதிர்ச்சியான கதாபாத்திரங்களுக்குப் பஞ்சமிருக்காது. ‘சுக்ரன்’ படத்தில் அப்படிப்பட்ட வேடம்தான் கிடைத்தது.

“மிகைப்படுத்தி நடிக்காமல் இயல்பாக நடித்திருப்பதாகப் படம் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் ஆத்யா.

தமிழில் நடிக்கும்போது இவருக்கு மொழிப் பிரச்சினை என்பது ஒரு தடையாக இல்லையாம். சிறு வயது முதலே தமிழில் எழுதவும் பேசவும் உரிய பயிற்சி பெற்றாராம்.

“தமிழ் சினிமா பார்த்துதான் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். சென்னையில் படிக்க வேண்டும் என முடிவானதும் தமிழ் கற்றுக்கொண்ட பிறகு அங்கு சென்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் ‘முப்பதே நாள்களில் தமிழ் கற்பது’ எப்படி என்ற புத்தகம் வாங்கி, தமிழில் பேசிப் பழக ஆரம்பித்தேன்,” என்று சொல்லும் ஆத்யா, தற்போது ஓரளவு சரளமாகப் பேசுகிறார்.

‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் தனது கதாபாத்திரத்துக்குப் பின்னணிக் குரல் கொடுக்க விரும்பினாராம். ஆனால் அதற்குள் துபாய் செல்ல வேண்டியிருந்ததால் அது சாத்தியமாகவில்லை என வருத்தப்படுகிறார்.

அடுத்து, ‘நாக் பூமி’ என்ற இந்திப் படத்திலும் நடித்துள்ளார் ஆத்யா. இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாம்.

நாக தேவதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

‘பருத்தி வீரன்’ முத்தழகி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதும் ஆத்யாவின் ஆசைகளில் ஒன்று.

குறிப்புச் சொற்கள்