‘மார்கன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் செஷ்விதா.
தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர்களுக்கு ‘பரமசிவன் பாத்திமா’ படத்திலேயே இவரது தரிசனம் கிடைத்திருக்கும். அதில், ‘என் விரதங்கள்’ என்ற பாடலில், காந்தப் பார்வையும் கையில் ஒலிப்பெருக்கியுமாக நின்று ரசிகர்களை வசீகரித்தவர்.
“உண்மையாகவே எனக்கு அழகானதொரு வரவேற்பை அளித்துள்ளது தமிழ் சினிமா. எல்லாரையுமே இங்கு மரியாதையுடன் நடத்துகிறார்கள்.
“நான் பார்ப்பதற்கு காலஞ்சென்ற நடிகை ‘சில்க்’ சுமிதாபோல் இருப்பதாக ஊடகங்களில் குறிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பாராட்டு. இதற்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை.
“ஒப்பனை இல்லாமல் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் முகம் அழகாக இருக்கிறது என்பன போன்ற பாராட்டுகள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் கேட்கிறேன்.
“தமிழ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது எனில், ‘மார்கன்’ படத்தின் மூலம் நல்ல அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்துள்ளன,” என மனநிறைவுடன் பேசுகிறார் செஷ்விதா.
இவரது சொந்த ஊர் பெங்களூரு. பிறந்த ஊர் சேலம். பெற்றோர் முதலில் வைத்த பெயர் கனிமொழி. இவரது தாயாருக்கு எண் கணிதத்தில் (நியூமராலஜி) ஈடுபாடு அதிகமாம். அதனால் கனிமொழி பின்னாள்களில் செஷ்விதா ஆகிவிட்டார். அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது ஒரே சகோதரன் ஆகாஷ், கல்லூரி மாணவர்.
“ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்பது மட்டுமே எனது ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும், தகவல் தொழில்நுட்பப் பணி என்றால், பெங்களூரில் இருக்கலாம் என்றும் கணக்குப் போட்டேன்.
தொடர்புடைய செய்திகள்
“தனியொருவராக எங்களை அம்மாதான் கரையேற்றினார். அவரை நன்றாகப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலை.
“துபாயில் உள்ள ஓர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பதே அடுத்த இலக்கு. கடுமையாக வேலை பார்த்து எப்படியோ அதையும் சாதித்துவிட்டேன்,” என்று சொல்லும் செஷ்விதா, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நடன வகுப்புகளுக்குச் செல்வதுண்டு.
அங்கு இவரைப் பார்த்த பலரும், இவரது முக அமைப்பும் கண்களும் நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில்தான் கன்னடத் திரையுலகக் கதவைத் தட்டினாராம். ஆனால், எதிர்பார்த்த வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.
“எனது தன்னம்பிக்கையை தளர்த்தும் விதமாக கிண்டல் செய்தனர். எனது நிறம் குறித்து கேலி செய்தபோது, இச்சமூகத்தின் மீது பெரும் கோபம் ஏற்பட்டது.
“என் முதல் படத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் எந்தக் கோணத்தில் அழகாக இருப்பேன் என்பதை எனக்கே தெரியப்படுத்தியவர் அவர்தான்.
“விஜய் ஆண்டனி மிகவும் பண்பானவர். ‘திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். சினிமா கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதிகம் எதிர்பார்த்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் அது கொடுக்கும் வலியை நம்மால் தாங்க முடியாது’ என்று நல்ல அறிவுரை கூறினார்.
“அவர் வாங்கிய அடிகளையெல்லாம் நாம் வாங்கியிருந்தால் மன அழுத்தத்தின் உச்சிக்குப் போயிருப்போம். பல படங்களில் நடித்த பிறகு, அறிமுக நடிகர்களிடம் பெரிய கதாபாத்திரங்களை ஒப்படைக்கும் அன்பும் துணிச்சலும் அவரிடம் மட்டுமே உள்ளன,” என்று சொல்லும் செஷ்விதாவுக்கு, மூத்த நடிகைகள் ரேவதி, ஷோபனா ஆகியோரைப் போல் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாம்.

