தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவாலில் வென்று காட்டிவிட்டேன்: மமிதா பைஜு உற்சாகம்

3 mins read
56c525f6-6c53-4cd3-855e-e38c86779565
மமிதா பைஜு. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘பிரேமலு’ என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய இளையர்களின் அபிமான நாயகியாக மாறிவிட்டார் மமிதா பைஜு. இவர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து அண்மையில் வெளியான ‘டூட்’ படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

‘டூட்’ படம் தன் மனத்துக்கு மிக நெருக்கமான படமாக அமைந்துவிட்டது என்கிறார் மமிதா.

“அதற்கு சில காரணங்கள் உள்ளன. என் நடிப்பில் வெளியாகி நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ள முதல் படம் இது. சினிமாவில் நடிக்கப் போவதாக என் வீட்டில் கூறியபோது, யாருக்கும் அதில் விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அனுமதி அளித்தனர்.

“ஆனால் இன்று ‘டூட்’ படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதும் பல்வேறு தரப்பினர் என் நடிப்புத் திறமையைப் பாராட்டுவதும் என் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.

“உண்மையில் என் குடும்பம் விடுத்த மறைமுக சவாலில் வென்று காட்டிவிட்டேன். மொத்தத்தில் என் கனவு நனவாகிவிட்டது. இத்தகைய ஒரு வெற்றியைப் பெறவேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாகவும் இருந்தது,” என்று தனக்கே உரிய வெள்ளந்திச் சிரிப்புடன் சொல்கிறார் மமிதா.

மமிதாவின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள கிடாங்கூர். தந்தை பைஜு கிருஷ்ணன் மருத்துவர். தாயார் மினி. குடும்பத்தில் உள்ள பலரும் நன்கு படித்தவர்கள்.

சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், ‘சைக்காலஜி’ துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். எப்படியாவது இதே துறையில் பட்ட மேற்படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறாராம். அப்போதுதான் தனது வீட்டாருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்று பொறுப்புடன் பேசுகிறார் பைஜு.

சரி, என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு, அண்மைய ஒரு பேட்டியில், தனக்கே உரிய எதார்த்தத்துடன் பதில் அளித்துள்ளார்.

“இந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன், இந்த நாயகன்தான் வேண்டும், இவர்தான் இயக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்புகள் எல்லாம் கிடையாது.

“எல்லாருடனும் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு மொழி, இனம் என்பதெல்லாம் பிரச்சினை அல்ல. சுதந்திரமாகச் செயல்பட்டு வித்தியாசமான பாத்திரங்களில் தோன்ற வேண்டும் என்பது மட்டுமே எனது எதிர்பார்ப்பு,” என்கிறார்.

‘பிரேமலு’ மலையாளப் படம்தான் மமிதாவை திரையுலகுக்கு கொண்டு வந்தது. ஜி.வி.பிரகாஷுடன் நடித்த ‘ரிபெல்’தான் தமிழில் முதல் படம். பின்னர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பிறகு அந்த வாய்ப்பு கைகூடவில்லை. அந்தப் படம் இப்போது பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிறது.

“நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே எனும் வருத்தம் இன்னும் மனத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஏமாற்றங்கள் ஏற்படாதவாறு நன்கு திட்டமிட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.

டூட்’ படத்தின் வெற்றி, அடுத்த படத்தின் கதையைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் பொறுப்பைத் தந்துள்ளது.

“மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது 46வது படத்தில் நான்தான் நாயகி. தனுஷின் 54வது படத்திலும் என்னைப் பார்க்கலாம். இவை போக, மலையாளத்திலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.

“தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என நினைக்கவே இல்லை. வேறு மொழி நடிகையின் படம் நூறு கோடி ரூபாய் வசூல் காண்பது பெரிய விஷயம். தமிழ் ரசிகர்கள் மொழி கடந்த தரமான படைப்புகளைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் மமிதா.

குறிப்புச் சொற்கள்