தென்னிந்தியத் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தபோதே திடீரென திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கும் திரையுலகுக்கும் ‘குட் பை’ சொன்னவர் நதியா.
தற்போது தன் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
சினிமா வேண்டாம் எனத் தாம் எடுத்த முடிவில் தமக்கு இதுவரை எந்தவித வருத்தமும் ஏற்பட்டதில்லை என்கிறார் நதியா.
“அது நான் எடுத்த முடிவு. திருமணத்துக்கு முன்பே என் கணவரை எனக்கு நன்கு தெரியும். அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு முடிந்த பிறகு திருமணம் என முடிவு செய்திருந்தோம். அதேபோல் அவர் அமெரிக்காவில் குடியேறியதும் திருமணம் செய்து கொண்டோம்.
“வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர நான் எடுத்த முடிவுதான் சினிமாவில் இருந்து விலகியது. இந்தப் பெயர், புகழ், பணம் குறித்தெல்லாம் பெரிதாக நினைப்பதே இல்லை.
“மும்பை, அமெரிக்கா என நான் எங்கு இருந்தாலும், தமிழ் மக்கள் மீது வைத்துள்ள எனது அன்பு மாறியதில்லை. அதேபோல் தமிழ் மக்களும் என்மீது வைத்துள்ள அன்பு துளிகூட குறையவில்லை. அதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளும் இல்லை. இதற்காக கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் நதியா.
திரையுலகில் அறிமுகமானபோது இவருக்கு 18 வயதுதான் ஆகியிருந்ததாம்.
‘பூவே பூச்சூடவா’ படத்தில் பழம்பெரும் நடிகை பத்மினியுடன் இணைந்து நடித்ததை நினைத்து இப்போதும் பெருமைப்படுவதாகச் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் மும்பை பெண் என்பதால் தென்னிந்திய மொழிப் படங்களை அதிகம் பார்த்ததில்லை. அதனால் பத்மினி அம்மா குறித்து அப்போது அதிகம் தெரியாது. ஆனால், படப்பிடிப்பு முடிவதற்குள் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். முதல் படத்திலேயே அவருடன் இணைந்து நடித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்பது பிறகுதான் புரிந்தது.
“படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுவார். அவர் சோர்வடைந்து நான் பார்த்ததே இல்லை. என்னுடைய 18 வயதுக்குத் தகுந்த மாதிரி அவரும் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்வம் காட்டி நடித்தார்,” என்கிறார் நதியா.
‘நதியா என்றால் இளமை என்கிறார்கள். இதன் ரகசியம் என்ன’ என்று கேட்டால், நதியாவின் அழகுச் சிரிப்புதான் முதல் பதிலாகக் கிடைக்கிறது. பிறகு விரிவான விளக்கம் வருகிறது.
“இளமை என்பது வெறும் தோற்றம் மட்டுமல்ல. நமது மனம், எண்ணங்கள், செயல்பாடுகள் என எல்லாம் சேர்ந்ததுதான் இளமை. உடல் பருமனாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இருப்பதுதான் ஒருவரது இளமையின் அடையாளம்.
“என் தந்தை சிறு வயதில் என்னையும் என் தங்கையையும் ஓட்டப் பயிற்சி, கைப்பந்து எனப் பல விளையாட்டுகளில் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தினார். அதுதான் என் உடல்நலம் இப்போதும் நன்றாக இருப்பதற்குக் காரணம்.
“எது தேவையோ அதை மட்டும் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், மனத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம். எதிலும் முழுக்கவனம் தேவை. அதுவே ஒரு தியானம்போல் அமைந்துவிடும்,” என்று சொல்லும் நதியா, தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.