தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யாருடனும் எனக்குப் போட்டி இல்லை: அதர்வா

3 mins read
183d6353-f387-43e2-a457-2924d8f21c2a
அதர்வா. - படம்: ஊடகம்

அண்மையில் வெளியான ‘டிஎன்ஏ’ படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்துள்ள வரவேற்பு அதர்வாவை துள்ளாட்டம் போட வைத்திருக்கிறது.

இவரது தம்பி ஆகாஷும் நடிகராகிவிட்டார். ஒரு வீட்டுக்குள்ளேயே போட்டி வந்துவிட்டதா என்று கேட்டால், தனக்கு யாரிடமும் எப்போதுமே போட்டி இல்லை என்று தனக்கே உரிய மென்மையான சிரிப்பை உதிர்க்கிறார் அதர்வா.

அண்மைய பேட்டியில், தனது மனம் திறந்து, திருமணம், ரசிகர்கள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

“கூடுமானவரை, வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதேபோல் ஆகாஷ் தனக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்வார். இருவருமே அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து ஆலோசிப்பது உண்டு.

“அப்பா எனக்கு என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் என் தம்பிக்குச் சொல்லியிருக்கிறேன். ‘உன் முடிவை நீயே எடு. சரியோ, தவறோ, அதற்கு நீதான் பொறுப்பு’ என்று அப்பா அடிக்கடிச் சொல்வார்.

“ஆகாஷ் விவரம் அறிந்த இளையராக வளர்ந்துவிட்டார். எனவே, இனி அவர்தான் எதிலும் யோசித்து முடிவெடுப்பார். அண்ணனாக நான் எப்போதும் துணை நிற்பேன்,” என்று சொல்லும் அதர்வா, ‘இதயம் முரளி’ படத்தில் நடிப்பது மிகுந்த மனநிறைவு தருவதாகக் கூறுகிறார்.

இதே தலைப்பில் வேறொரு நடிகர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. பிறகு, வெவ்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன.

“ஆனால் கடைசியில் இந்தத் தலைப்பும் படமும் எனக்குத்தான் அமைந்தன. அப்பா பெயரைச் சுமக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

“அப்பா என்றதும், அவர் லுங்கி கட்டிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வதுதான் நினைவுக்கு வருகிறது. வெளியே பெரிய நடிகராக இருந்தாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் தோட்ட வேலை, கார் துடைப்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும்.

“செடிகளை வளர்ப்பதும் அவருக்குப் பிடித்தமான ஒன்று. அதனாலேயே அவர் நட்டு வைத்த செடிகளை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வளர்க்கிறேன். பல செடிகள் இன்று மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது, அப்பாவை அருகில் பார்ப்பது போலவே நினைக்கத் தோன்றும்,” என்று நெகிழ்ந்து போகிறார் அதர்வா.

நெருக்கமான பலர், எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்களாம். அவர்களுக்கெல்லாம் அதர்வா தரும் ஒரு பதில், ‘பொறுமையாகச் செய்துகொள்வேன்’ என்பதுதான்.

“எனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது? திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்குப் பெரிதாக எந்தக் காரணமும் இல்லை. சில விஷயங்கள் தன்னால் நடக்கும். என் வாழ்க்கையில் நிச்சயம் திருமணத்துக்கு இடமுண்டு. ஆனால், அது இப்போதைக்கு இல்லை.

“எனக்கு ரசிகைகள் அதிகம். ஒருவேளை, நான் காதலிக்கிறேனா என்றும் கேட்கிறார்கள். ரசிகைகளுக்கு என் நன்றி. ஒரு நடிகனுக்கு ரசிகர்களின் பாராட்டுத்தான் உற்சாகம் தரும் ஊட்டச்சத்து.

“ஒரு படம் நன்றாக இருந்தால் பாராட்டுகிறார்கள். இல்லையென்றால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு நாம் சோர்ந்துவிடாமல் தட்டிக்கொடுக்கிறார்கள். ரசிகர்களுக்காகவே நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படுகிறது.

“வெளியே செல்லும்போது, ரசிகைகள் ஆர்வத்துடன் தேடி வந்து நட்பாகப் பேசி வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் அதர்வா.

தற்போது இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோருடன் இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்