இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி.
தன்னை எங்கேயும் ஒரு நாயகியாக நினைத்துக் கொள்வது கிடையாது எனக் கூறும் இவர், தனது உடல் பருமன் தன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை என்றும் சொல்கிறார்.
தமிழக வார இதழ் ஒன்றுக்கு இவர் அளித்துள்ள நேர்காணலில், குறிப்பாக உடல் எடை பிரச்சினை என்பது மலையாளத் திரையுலகில் இல்லை. திறமைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து அடையாளப்படுத்துவார்கள். அதனால் தான் திரையுலகில் தொடர்ந்து நான் நிலைத்து நிற்கிறேன் என்கிறார்.
“உடல் பருமனால் இப்போதைக்கு பாதிப்புகள் இல்லை என்றாலும், நானாகவே ஆரோக்கியமாக உடலைப் பேண இப்போது சில உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறேன்.
“ஆனால், ‘ஜீரோ’ உடல்வாகு, முகத்தை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சைகளில் எல்லாம் எனக்கு ஆர்வமில்லை.
“இயக்குநர் ராம் தனது படத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்தபோது, அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் என்னை இரண்டொரு நாள்கள் மனதளவில் பாதித்தது. அவருடைய கதையில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்.
“அவர் நான் நடித்த ‘அப்பன்’ படத்தைப் பார்த்துவிட்டு இந்த வாய்ப்பைக் கொடுப்பதற்கு தேர்வு செய்ததாகச் சொன்னார்.
“கதை, எனது பாத்திரம் குறித்து எனக்குப் புரியும் விதத்தில் மலையாளத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“படப்பிடிப்பின்போது அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், எனது நடிப்பைப் பார்த்துவிட்டு ‘உங்கள் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தலாம் போல் தோன்றுகிறது’ என்றார்.
“ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
“என்னுடன் நடித்த சிவா, அஞ்சலி உட்பட அனைவரும் மெனக்கெட்டு நடித்திருந்தனர்.
“ராம் என்மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றி இருப்பதாக நினைக்கிறேன். மலையாளத்தில் நான் நடித்த ‘நுன்னக்குழி’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் ரசிகர்களும் எனக்குத் தங்களது அன்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
“சின்ன வயதில் இருந்தே தமிழ்ப் படங்கள் அதிகம் பார்த்து வளர்ந்தவள் நான். ஏராளமான கனவுகளுடன் உள்ளேன். எனக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார் கிரேஸ் ஆண்டனி.
“மலையாளத்தில் நகைச்சுவை வேடங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள் சிக்காமல் எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன்.
“பறந்து போ படத்திலும் அதுபோல், எல்லா அம்சங்களும் கலந்த பாத்திரம்தான். இதில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். உணர்வுபூர்வமான நடிப்பும் தந்திருக்கிறேன்.
“நமது வீட்டுக்குப் பக்கத்திலுள்ளவர்கள் எப்படி யதார்த்தமாக இருப்பார்களோ அதுபோன்ற ஒரு குடும்பக் கதைதான் ‘பறந்து போ’ படம்,” என்றார்.
‘ஹேப்பி வெட்டிங்’ படம்மூலம் மலையாளச் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த கிரேஸ் ஆண்டனி, ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் வில்லனாக நடித்த பகத் ஃபாசில் மனைவியாக நடித்து தனது புகழை பக்கத்து மாநிலங்களிலும் பரவச் செய்தவர்.
அதன்பிறகு மம்முட்டி, மோகன்லால், நிவின் பாலியுடன் இணைந்து ஆண்டுக்கு குறைந்தது நான்கு படங்களில் நடித்து நன்றாக நடிக்கும் நடிகைகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.
‘நீ ஒரு நாயகி எனும் எண்ணத்தை என்று நீ மனத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறாயோ, அன்றைக்கு உன்னுடைய திறமை மங்க ஆரம்பித்துவிடும்’ - இவை ‘தமாஷா’ மலையாளப் பட பட இயக்குநர் அஸ்ரஃப் ஹம்சா சொன்ன வார்த்தைகள்.
“அதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். இந்தக் காரணத்தால் தான் நான் எங்கேயும் என்னை ஒரு நாயகியாக பார்த்துக் கொண்டதோ, நினைத்துக் கொண்டதோ கிடையாது என்கிறார் கிரேஸ்.
“மம்முட்டி, மோகன்லாலிடம் யார் வேண்டுமானாலும் எப்போதும் பேசலாம். மிகவும் எளிமையாக இருப்பார்கள்.
“கதைதான் நாயகன், அதற்கான கருவிதான் நடிகர்கள் என்பதுதான் அவர்களது மந்திரம். அதையே தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.
“எனது சொந்த ஊர் எர்ணாகுளம். இப்போது கொச்சியில் வசித்து வருகிறோம். அப்பா ஆண்டனி, குத்தகையாளர். அம்மா ஷைனி, குடும்பத் தலைவி. செலினா என்ற ஒரு சகோதரி உள்ளார்.
“சினிமா பின்புலம் இல்லாத குடும்பம். திரைப்படத்தில் நடிப்பது என்றாலே பயப்படுவார்கள்.
“சிறுவயதில் இருந்தே நடிப்புமீது ஆர்வம். பிஏ பரதநாட்டியம் படித்தேன். தொடர்ந்து ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தேன். படித்துக்கொண்டு இருந்தபோது வந்த வாய்ப்புதான் ‘ஹேப்பி வெட்டிங்’,” என்கிறார் கிரேஸ் ஆண்டனி.
‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
“அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. அஞ்சலி, கிரேஸ் ஆண்டனியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து மனதில் தங்கிவிட்டது. அதுபோல, மிர்ச்சி சிவாவும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். நம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் மாதிரி ரொம்பவே யதார்த்தமாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார்.
“அலுவலகத்திற்குப் போகும் அப்பா, அம்மா, மகன் பற்றிய இந்தக் கதை நிச்சயமாக எல்லோராலும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்,” என்று அவர் கூறியுள்ளார்.

