‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரிஷ் கல்யாண், தற்போது ‘டீசல்’ படத்தின் மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்காக காத்திருக்கிறார்.
“இன்று பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்றாகிவிட்டது. ஆனால், இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள பெரும் அரசியல் யாருக்கும் தெரியவில்லை. இந்தப் படம் அதுகுறித்து பேசுகிறது,” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் கூறியதை அட்சரம் பிசகாமல் அப்படியே சொல்கிறார் ஹரிஷ்.
தன்னுடைய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வாழ்க்கையில் இருக்க முடியாது என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், சினிமா என்பது வெறும் கலை மட்டுமல்ல, அதில் வியாபாரமும் உள்ளது என்கிறார்.
“என் படங்கள் பெரிய வெற்றியை அடைய வேண்டும். மக்களை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற சராசரி ஆசை எனக்கும் உண்டு. ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதைப் பெற்று தந்தது. ‘லப்பர் பந்து’ படம் மிகப்பெரிய கவனிப்பைப் பெற்றுத் தந்தது.
“என்னுடைய தீபாவளி வெளியீடான ‘டீசல்’ படமும் அது மாதிரி மக்களை மகிழ்ச்சிபடுத்தும். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாக உருவாகியுள்ளது.
“இந்தப் படம் வெளியானதும் எனக்கான பொறுப்புகள் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.
நல்ல கதைகளும் புதுமையான அம்சங்களும் வெற்றி பெறும் நேரம் உருவாகி இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அத்தகைய வெற்றியைத்தான் ‘லப்பர் பந்து’ படம் பெற்றதாகக் கூறியுள்ளார்.
“இன்றைய சூழலில் ‘டீசல்’ போன்ற கதைகளைச் சொல்லியே ஆக வேண்டும். நம் வாகனத்தின் டேங்கில் வந்துசேரும் பெட்ரோல், டீசல் பின்னணியில் உள்ள உள்குத்து அரசியல், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இந்தப் படத்தில் எளிமையாக விவரித்துள்ளார் இயக்குநர் சண்முகம்.
“இதனால் பாதிக்கப்படக் கூடிய மக்களின் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற கோணத்தில் யோசித்து, கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.
“இன்றைய தேதியில் கதை எப்படிப்பட்டதாக இருப்பினும், அதை வணிக ரீதியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை அற்புதமாகச் செய்துள்ளார் சண்முகம்.
“என்னுடைய கதாபாத்திரம் மிக முக்கியமானது என்றாலும் அதைவிட படத்தின் கதை முக்கியமானது. இதை உணர்ந்து கதையை முன்னிலைப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நன்றி. எனினும், என்னால் முடிந்தவரை மிகக் கவனமாகவும் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டும் நடிப்பை வழங்கியுள்ளேன்,” என்று சொல்லும் ஹரிஷ் கல்யாணுக்கு, ஒருமுறையாவது காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆசை உள்ளதாம்.
மற்றபடி, இன்ன கதாபாத்திரம்தான் வேண்டும் என்கிற அதீத எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை என்கிறார்.
“தற்போது இருப்பதில் சுவாரசியமான வேடங்களைத் தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் மக்கள் என்னை ஒவ்வொரு படியாக ஏற்றிவிடுகிறார்கள். இதற்காக அவர்களைக் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறது.
“எவ்வளவு நல்ல படங்களில் நடித்திருக்கிறோம் என்பதுதான் எனது எண்ணிக்கையாக உள்ளது. நல்ல கதைகளைக் கேட்டு நடிக்கும் பக்குவம் வந்துள்ளது,” என்று கூறியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.
‘டீசல்’ படத்தில் பெரும்பாலான காட்சிகளை நடுக்கடலில் படமாக்கியுள்ளனர். இதற்காக 40 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது.
நூறு டேங்கர் லாரிகள் அணிவகுத்து நிற்பதுபோன்ற பிரம்மாண்ட காட்சிகளையும் படத்தில் காணலாம்.